நஷ்டத்தில் ஓடினாலும் 24,000 ஊழியர்களுக்கு 'ஃப்ரீ டிக்கெட்' கொடுக்கும் ஏர் இந்தியா!
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்கள் 24 ஆயிரம் பேருக்கு இலவசமாக பயண டிக்கெட்டுகளை அளித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இந்த நிதியாண்டில் ரூ.3,900 கோடி நஷ்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்நிறுவனத்திற்கு ரூ.35,000 கோடி கடன் சுமை உள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் தனது ஊழியர்கள் 24 ஆயிரம் பேருக்கு இலவச பயண டிக்கெட்டுகளை வழங்கியுள்ளது.
டைரக்டர்கள் மற்றும் இணை நிர்வாக இயக்குனர்களுக்கு ஆண்டுக்கு 24 இலவச டிக்கெட்டுகள் கிடைக்கும். அதுவே துணை பொது மேலாளர்கள் போன்றோருக்கு ஆண்டுக்கு 20 டிக்கெட்டுகள் இலவசமாக கிடைக்கும். 20 வருட அனுபவத்திற்கு கீழ் உள்ள உதவி பொது மேலாளர்கள், மூத்த உதவி பொது மேலாளர்கள் ஆகியோருக்கு 12 டிக்கெட்டுகளும், 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு 16 டிக்கெட்டுகளும் கிடைக்கும்.
மீதமுள்ள ஊழியர்களில் 1 முதல் 20 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு 8 இலவச டிக்கெட்டுகள் கிடைக்கும். ஏர் இந்தியா நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்பவர்களுக்கு 12 டிக்கெட்டுகள் கிடைக்கும். மேலும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் இந்த டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
அவர்கள் ஓய்வு பெற்ற போது எத்தனை ஆண்டுகள் பணியில் இருந்தனர் என்பதன் அடிப்படையில் டிக்கெட்டுகள் வழங்கப்படும். இதில் பாதி டிக்கெட்டுகளை சர்வதேச பயணத்திற்கு பயன்படுத்தலாம். நஷ்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்த திட்டத்தை ஏர் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா அதிகாரிகள் கூறுகையில், முன்பெல்லாம் ஊழியர்களுக்கு அளவில்லா இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இந்த புதிய திட்டம் மூலம் இலவச டிக்கெட்டுகளுக்கு ஒரு அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
Category: மாநில செய்தி
0 comments