பில் கேட்ஸ் நம்பிக்கை: 2035ம் ஆண்டுக்குப் பின் ஏழை நாடுகளே இருக்காது!
2035ம் ஆண்டுவாக்கில் உலகில் ஏழை நாடு என்று ஒன்றே இருக்காது என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கணித்துள்ளார்.
அதேபோல சிறார்கள் இறப்பு விகிதமும் அந்த காலகட்டத்தில் மிக மிக குறைந்து போயிருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
கேட்ஸும், அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும் எழுதியுள்ள தங்களது வருடாந்திர கடிதத்தில் ஏழ்மை குறித்தும், அது ஒழியப் போவது குறித்தும் இப்படி கணிப்புடன் எழுதியுள்ளனர்.
ஆண்டுதோறும் தங்களது கேட்ஸ் பவுண்டேஷன் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், தான தர்மங்கள் குறித்தும், வருங்காலத் திட்டங்கள் குறித்தும் விளக்கி கடிதம் வெளியிடுவது கேட்ஸ் மற்றும் மெலிண்டாவின் வழக்கமாகும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான கடிதத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதில் கேட்ஸ் கூறுகையில், ஏழை நாடுகள் என்ற பதமே விரைவில் நீங்கும். 2035ம் ஆண்டில் அது நனவாகக் காணலாம்.
பல நாடுகளில் அரசியல் காரணங்களால் அந்த நாடுகள் வளர்ச்சி அடையாமல் தவித்து வருகின்றன. வட கொரியாவை உதாரணமாகக் கூறலாம். ஆனால் மக்கள் வளர்ச்சிப் பாதையில்தான் பயணிக்க ஆர்வமாக உள்ளனர்.
ஏழை நாடுள் ஒருபோதும் ஏழை நாடாகவே இருக்க முடியாது, மாட்டார்கள். எனவே நிச்சயம் அவர்களும் ஒரு நாள் பணக்கார நாடுகளாக மாறுவார்கள். 2035ல் இது சாத்தியமாகும் என்பது எனது கணிப்பு.
உலகில் ஏழை நாடுகளே அந்த சமயத்தில் இருக்காது என்று நான் திடமாக நம்புகிறேன். அந்த சமயத்தில் உலகத்தின் எந்த மூலையிலும் ஏழை நாட்டை நாம் பார்க்கவே முடியாது.
அனைத்து நாடுகளிலும் வறுமைக் கோடு என்ற ஒன்றே இருக்காது. அனைத்து நாடுகளிலும் நடுத்தர வர்க்கத்தினர் அல்லது பணக்காரர்கள் மட்டுமே இருப்பார்கள்.
இது மாபெரும் மனிதகுல சாதனையாக இருக்கும். நான் பிறந்தபோது உலகின் பெரும்பாலான நாடுகள் ஏழ்மையில்தான் இருந்தன. அடுத்த 20 ஆண்டுகளில் பல ஏழை நாடுகள் பணக்கார நாடுகளாயின.
எனவே இனி வரும் கால கட்டத்தில் பல கோடி மக்கள் ஏழ்மையின் பிடியிலிருந்து விடுபடுவர். பணக்காரர்கள் என்ற அந்தஸ்துக்கு அவர்களும் மாறுவார்கள். எனது வாழ்நாளுக்குள் இந்த உலகத்தை பணக்கார உலகமாக பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது நிச்சயம் எனக்கு மிகப் பெரிய சந்தோஷமாக இருக்கும்.
பல நாடுகள் வெளிநாட்டு உதவிகளை வீணடிக்கின்றன. உண்மையில் அதைச் செய்வது அந்தந்த அரசுகள்தான். தங்களுக்கு வரும் பணத்தை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்துவதில்லை. வெளிப்படையாக சொல்வதானால், வெளிநாட்டு உதவி என்பது அருமையான முதலீடாகும். அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களுக்குத் தேவையானதை செய்து தரவும் இது பெருமளவில் பயன்படும். நீண்ட கால பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு இது அடித்தளமாக அமையும்.
இதே கடிதத்தில் மெலிண்டா கூறுகையில், இன்று குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்து பலரும் கவலைப்படுகிறோம். ஆனால் பலரோ, குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்தால், உலகில் மக்கள் தொகை அதிகரித்து விடுமே என்று வினோதமாக கவலைப்படுகிறார்கள். இது வேதனை தருகிறது, கவலை தருகிறது.
இதே கடிதத்தில் மெலிண்டா கூறுகையில், இன்று குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்து பலரும் கவலைப்படுகிறோம். ஆனால் பலரோ, குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்தால், உலகில் மக்கள் தொகை அதிகரித்து விடுமே என்று வினோதமாக கவலைப்படுகிறார்கள். இது வேதனை தருகிறது, கவலை தருகிறது.
மக்கள் தொகை பெருகுகிறதே என்று கவலைப்படும் அதேசமயத்தில், மனிதகுலத்தின் அழிவை நாம் மறந்து விடுகிறோம். ஒரு உயிரைக் காப்பதால், மக்கள் தொகை அதிகரிக்க நாம் வழிவகுக்கிறோம் என்பது தவறான கருத்தாகும். குறிப்பாக குழந்தைகளைக் காப்பதில் நாம் சுணக்கம் காட்டவே கூடாது.
மக்களுக்கு தேவையான அடிப்படை சுகாதாரம், வளர்ச்சி, அடிப்படை உரிமைகள், சமத்துவம் என எல்லாமே இருக்க வேண்டும். அப்போதுதான் அது நிலைத்த, நிம்மதியான சமுதாயம் அமைய வழி வகுக்கும்.
நாங்கள் இருவருமே எங்களது வாழ்நாளுக்குள் மிகவும் மோசமான வறுமையில்லாத உலகம், ஆரோக்கியமான குழந்தைகள், மதிக்கப்படும் மனித குலம், சீரான வளர்ச்சியுடன் கூடிய உலகத்தைக் காண ஆசைப்படுகிறோம். அதற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று கேட்ஸும், மெலிண்டாவும் இணைந்து கூறியுள்ளனர்.
Category: உலக செய்தி
0 comments