மாநில டென்னிஸ் போட்டி -பெரம்பலூர் மாணவர்கள் 16ம் முறையாக சிறப்பிடம்!
பெரம்பலூர், ஜன. 21:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ஜேகேகேஎம் டென்னிஸ் கிளப் சார்பாக மாநில அளவில் 2ம் ஆண்டு டென்னிஸ் விளையாட்டுப் போட்டி கடந்த 16ம் தேதி துவங்கி 4 நாட்கள் ஓப்பன் முறையில் நடைபெற்றது. இதில் 10, 12 மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் 250 மாணவர்கள் பங்கேற்றனர்.
10 மற்றும் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவுகளில் பெரம்பலூர் வெங்கடேசபுரம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் சூர்யா முதலிடத்தை வென்றார். இதே பள்ளி மாணவர் விஜய் 2ம் இடத்தை வென்றார். மேலும், இவர்கள் இருவரும் இரட்டையருக்கான போட்டியில் அரையிறுதிச் சுற்று வரை தகுதி பெற்றனர்.
மாநில அளவில் ஒற்றையருக்கான போட்டிகளில் மாணவர் சூர்யா தொடர்ந்து 16வது முறையாக முதலிடத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த 16 போட்டிகளிலும் விஜய் 2ம் இடத்தை வென்றுள்ளார்.
ஏற்கனவே கோவை, தஞ்சை, திருச்சி, நாமக்கல், கரூர், சேலம், சிவகாசி, குளித்தலை உள்ளிட்ட 15 இடங்களில் மாநில அளவில் நடத்தப்பட்ட டென்னிஸ் போட்டிகளில் சூர்யா தொடர்ந்து முதலிடம் பெற்றார்.
இந்த 16 போட்டிகளிலும் வழங்கப்பட்ட ரொக்கப் பரிசுகளால் 2013&14ம் ஆண்டில் மட்டும் மாணவர் விஜய்க்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகை கிடைத்துள்ளது. இதே போல், இப் பள்ளி மாணவர்கள் ஸ்ரீவிஷால், லெஷ்மன் பாபு ஆகியோர் காலிறுதி சுற்று வரை தகுதி பெற்றனர்.
இதைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற விழாவில் சாதனை மாணவர்களையும், இவர்களுக்குப் பயிற்சியளித்த பயிற்சியாளர் பாப்சிகரனையும் பள்ளித் தாளாளர் ரவிச்சந்திரன், முதல்வர் அங்கையற்கண்ணி ஆகியோர் பாராட்டினர். தமிழக அளவில் சாதனை படைத்து, பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ள 5ம் வகுப்பு மாணவர்களான சூர்யா, விஜய் ஆகியோர் இரட்டையராகப் பிறந்தவர்கள் ஆவர். இவர்களது தந்தை பெயர் பிச்சை பிள்ளை. பெரம்பலூர் ராஜா நகரில் வசித்துவரும் இவர் புதுபஸ்டாண்டில் டீக்கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: மாணவர் பகுதி
0 comments