தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசு 13ம் தேதி வரை வாங்கலாம்!
சென்னை, ஜன. 7:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி பெறும் ஒரு கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் என சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, கடந்த சனிக்கிழமை குன்னூரில் நடந்த விழாவில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். நேற்று முன்தினம் அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களில் இந்த திட்டத்தை துவக்கி வைத்தனர்.
இதையடுத்து 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலாம் என்ற சுற்றறிக்கை தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் படி நேற்று காலை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது.
தொடர்ந்து 9ம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. 10ம் தேதி ரேஷன் கடைக்கு விடுமுறையாகும். 9ம் தேதி வரை வாங்காதவர்கள் தொடர்ந்து 11, 12, 13 ஆகிய தேதி வரை ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதையொட்டி அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நின்று பொருட் களை வாங்கிச் சென்றனர்.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மேலும், ஒவ்வொரு கடையில் உள்ள மொத்த கார்டுகளை நான்காக பிரித்து, ஒவ்வொரு பகுதி கார்டுகளுக்கு ஒவ்வொரு நாள் என தகவல் பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
இதனால் நேற்று பொங்கல் பரிசு வாங்க வந்த பலர், தங்களின் கார்டு எண் தகவல் பலகையில் இல்லாததால் திரும்பி சென்றனர்.
அதேபோன்று, குடும்ப அட்டைகளில் பெயர் உள்ளவர் வந்தால் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு, கார்டில் சீல் வைக்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களிடம், கார்டுக்கு சொந்தக்காரர்கள் வந்தால் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று போலீசார் திருப்பி அனுப்பி விட்டனர்.
Category: மாநில செய்தி
0 comments