எழுச்சியுடன் நடந்து முடிந்த இளம்பிறை மாநாடு - ஆளூர் ஷாநவாஸ்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 'இளம்பிறை மாநாடு' திருச்சியில் மிகுந்த எழுச்சியோடு நடந்து முடிந்திருக்கிறது.
இதே திருச்சியில் அண்மையில் பா.ஜ.க நடத்திய இளந்தாமரை மாநாட்டை தூக்கி வைத்துக் கொண்டாடிய ஊடகங்கள், முஸ்லிம் லீக் மாநாட்டை கண்டுகொள்ளவே இல்லை. பா.ஜ.க மாநாட்டில் மோடியும், மற்றவர்களும் பேசியது போல வெறுப்பின் அடிப்படையிலான எந்தப் பேச்சையும் முஸ்லிம் லீக் மாநாட்டில் பார்க்க முடியவில்லை. முழுக்க முழுக்க அன்பை விதைக்கும் பேச்சுக்களும், சமூக நல்லிணக்கத்துக்கான தீர்மானங்களுமே ஓங்கி நின்றன. ஆனால், சமூகங்களைப் பிளவுபடுத்தும் சக்திகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம், சமூகங்களின் இணைப்புக்காகக் களமாடுபவர்களுக்குக் கிடைக்காதிருப்பதுதான் பெரும் அவலம்.
முஸ்லிம் லீக் முதியவர்களின் கட்சி, முஸ்லிம்களிடம் செல்வாக்கு இழந்த கட்சி என்றெல்லாம் செய்யப்படும் பரப்புரைகள், எவ்வளவு பொய்யானவை என்பதை அம்பலப்படுத்தும் வகையில் இருந்தது திருச்சியில் கூடிய பெருங்கூட்டம். முஸ்லிம் சமூகத்தின் அடிநாதமாய் விளங்கும் முஹல்லா ஜமாஅத்துகளை ஒருங்கிணைத்ததன் மூலம், தமது வலிமை என்ன என்பதை முஸ்லிம் லீக் வெளிக்காட்டியுள்ளது. கட்சிக்கு கிளை இல்லாமல் கூட ஊர்கள் இருக்கலாம்; ஆனால், ஜமாஅத் இல்லாமல் எந்த ஊரும் இருக்காது. அந்த வகையில், எல்லா ஜமாஅத்களிலும் முஸ்லிம் லீக்குக்கு செல்வாக்கு உண்டு எனும்போது, அந்த வலிமை எதனோடும் ஒப்பிட முடியாத உயரத்தில் உள்ளது.
முஸ்லிம் லீக்குக்கு உள்ள தனிச்சிறப்பே இதுதான். இந்த வலிமை தான் அவ்வியக்கத்தை அதிகாரத்தை நோக்கி நகர வைத்தது. பிரிவினைக்கு முன்னும் சரி, பின்னும் சரி முஸ்லிம் சமூகம் அடைந்த அனைத்துப் பயன்களுக்கும் அவ்வியக்கமே காரணம்.
இந்தியாவிலேயே முதன்முதலில் சமூக நீதியைப் பெற்றவர்கள் முஸ்லிம்கள் தான். 1909 இல் மிண்ட்டோ மார்லி சீர்திருத்தங்களின் மூலம், தனி வாக்காளர் தொகுதி முறை, அரசுப் பணிகளிலும் அமைச்சரவையிலும் இடஒதுக்கீடு, அவை சரியாக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் என, முஸ்லிம்களுக்கான உரிமைகளையும் – அந்த உரிமைகளுக்கான பாதுகாப்பையும் பெற்றுத் தந்தது அகில இந்திய முஸ்லிம் லீக்.
பிரிவினைக்குப் பின் அகில இந்திய முஸ்லிம் லீக் என்பது பாகிஸ்தான் கட்சி என்றாகிவிட்ட நிலையில், இந்தியாவில் முஸ்லிம் லீக்கின் பெயரை உச்சரிக்கவோ, இந்திய முஸ்லிம்களை வழி நடத்தவோ நாதியற்றிருந்த சூழலில், துணிந்து தலைமை கொடுத்தவர் காயிதே மில்லத்.
இந்தியாவில் முஸ்லிம் லீக்கை கலைத்து விடுமாறும், காங்கிரசில் இணைந்து உயர் பதவிகளை பெற்றுக் கொள்ளுமாறும் நேரு போன்ற தலைவர்கள் வலியுறுத்தியபோது அதை அடியோடு நிராகரித்தவர் காயிதே மில்லத்.
பணக்கார முஸ்லிம்கள், பாரம்பரிய முஸ்லிம் லீக்கர்கள் பலரும் அரசின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி அடையாளத்தை மாற்றிக் கொண்ட போதும், தனித்து நின்று தனித்துவத்தை நிலைநாட்டியவர் காயிதே மில்லத்.
பிரிவினைப் பழி சுமத்தி முஸ்லிம்களை தனிமைப்படுத்த வல்லபாய் பட்டேல் போன்ற வகுப்புவாத சக்திகள் சூழ்ச்சி செய்தபோது, தன் மதிநுட்பத்தால் அதை முறியடித்து பொதுநீரோட்டத்தில் முஸ்லிம்களை இணைத்தவர் காயிதே மில்லத்.
திராவிட இயக்கத்தவர்களுடன் தமிழ் நாட்டிலும், கம்யூனிஸ்ட்களுடன் கேரளாவிலும் கூட்டணி கண்டு, தன் உத்திகளின் மூலம் அரசியல் அரங்கில் முஸ்லிம்களுக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தவர் காயிதே மில்லத்.
அரசு அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் தன் சுய லாபங்களுக்கு பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க சமூக மேம்பாட்டிற்காக பயன்படுத்தி, ஏராளமான கல்லூரிகள் உருவாகக் காரணமாயிருந்தவர் காயிதே மில்லத்.
தொலைநோக்கும், அர்ப்பணிப்பும், எதன் பொருட்டும் சமூகத்தைக் கூறுபோடாத தன்மையுடைய தலைமையும், அந்தத் தலைமையை வழிவழியாய்ப் பின்பற்றும் தொண்டர்களுமாக எழுந்தது முஸ்லிம் லீக்.
நல்ல அம்சங்கள் நிறைய இருந்தும், 1990 களுக்குப் பிந்தைய முஸ்லிம் அரசியலில் முஸ்லிம் லீக் பின்னடைவைச் சந்திக்க வேண்டி வந்தது ஏன்? என்பதும் ஆய்வுக்கு உரியது.
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தது முஸ்லிம் லீக். காங்கிரசுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்றார் அன்றைய முஸ்லிம் லீக் தலைவர் இப்றாகிம் சுலைமான் சேட். முடியாது என்றனர் மற்றவர்கள். வேறு வழியின்றி இயக்கத்திலிருந்து வெளியேறி தேசிய லீக்கைத் தொடங்கினார் அவர். முஸ்லிம் லீக் மீதான அதிருப்தியின் விளைவாக கேரளாவிலும், தமிழகத்திலும் புதிய புதிய முஸ்லிம் இயக்கங்கள் தோன்றின. அங்கே மதானி வீச்சுடன் புறப்பட்டார். இங்கே த.மு.மு.க தொடங்கப்பட்டது. புதிய இயக்கங்களை நோக்கி பெருங்கொண்ட இளைஞர்கள் சென்றபோது, அவர்களை ஈர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்ததுவே முஸ்லிம் லீக் செய்த பிழை.
கேரளாவில் தனித்துவத்தை நிலை நாட்டினாலும், காயிதே மில்லத்துக்குப் பிந்தைய முஸ்லிம் லீக் தமிழகத்தில் சற்று தடுமாறியது. குறிப்பாக காங்கிரசின் சின்னத்திலும், தி.மு.க.வின் சின்னத்திலும் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் போட்டியிட்டது மிகப்பெரும் பின்னடைவுக்கு வழிவகுத்தது. பிற கட்சிகளின் சின்னத்தில் நின்று சட்டமன்ற நாடாளுமன்ற அவைகளில் நுழைந்த போதும் – அங்கே முஸ்லிம்களின் குரலாகவே ஒலித்தனர் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள். எனினும், இந்த சின்னம் பிரச்சனை பெரும் பிரச்சனையாகி விட்டது. முஸ்லிம் லீக்கை விமர்சிக்கும் மற்ற அமைப்புகளுக்கு இது மிகப்பெரும் வாய்ப்பாகவும் அமைந்து விட்டது.
நவீன தொழில்நுட்ப வடிவங்களைக் கையாண்டு, இயக்கத்தின் வரலாறுகளை இளையதலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதில் முஸ்லிம் லீக் தலைமை கவனமின்றி இருந்ததும் அதன் பின்னடைவுக்கு இன்னொரு காரணம்.
ஆனால், இத்தகைய நிலைமைகள் இன்று மாறிவருவதைக் காண முடிகிறது. முஸ்லிம் லீக்கீன் 'ஏணி' சின்னத்திலேயே இனி போட்டியிடுவோம் என அறிவித்துள்ளனர். தொலைக்காட்சி, இணையதளம் ஆகிய நவீன ஊடகங்களில் முஸ்லிம் லீக்கினர் வலம் வருகின்றனர். மாணவர் மாநாடு, இளைஞர் மாநாடு என முஸ்லிம் லீக்கில் இளம் தலைமுறையினரின் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தொடர வேண்டும்.
'முஸ்லிம் லீக்கை எவராலும் அழிக்க முடியாது; ஏனெனில், அது சமுதாயத்தின் சொத்து' என்றார் காயிதே மில்லத். கண்ணியமான அந்தத் தலைவரின் வாக்கு ஒருபோதும் பொய்யாகாது.
ஆளூர் ஷாநவாஸ்
Category: சமுதாய செய்தி
0 comments