பெரம்பலூரை சுற்றுச்சாலையுடன் இணைக்க ரூ. 5 கோடி
பெரம்பலூரை சுற்றுச்சாலையுடன் இணைக்கும் சாலை மேம்பாட்டுப் பணிக்காக நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் கோட்டப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியிலிருந்து எளம்பலூர் ஊராட்சி வழியாக சுற்றுச்சாலையை இணைக்கும் திட்டத்திற்காக ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் கீழ், பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உப்போடையில் இருந்து எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரம் அருகே செல்லும் சுற்றுச்சாலையை இணைக்க, சாலை விரிவாக்கம் செய்து மேம்படுத்தப்பட உள்ளது.
பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உள்ள மயானம் முதல் சங்குப்பேட்டை வரை ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. பெரம்பலூர் பாலக்கரை முதல் நான்கு சாலை சந்திப்பு வரை சாலையின் நடுவே தடுப்புச் சுவர் கட்டுவதற்கு ரூ. 3.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆலத்தூர் கேட்- செட்டிக்குளம் வழியாக பொம்மனப்பாடி வரை ரூ. 13.50 கோடியிலும், செட்டிக்குளம் -நக்கசேலம் இடையே ரூ. 5.25 கோடியிலும் சாலை விரிவாக்கம் செய்து மேம்படுத்தப்பட உள்ளது என்றார் அவர்.
Category: மாவட்ட செய்தி


0 comments