.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

+2 மாணவ மாணவிகள் வேதியியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெற சக்ஸஸ் டிப்ஸ்!!

Unknown | 7:00 PM | 0 comments



பிளஸ் டூ பொதுத் தேர்வில் வேதியியல் பாடத்தைப் பொருத்தவரை, கனிம வேதியியல் (Inorganic), இயற் வேதியியல்  (Physical) மற்றும் கரிம வேதியியல் (Organic) ஆகிய மூன்று பகுதிகளில் ஏறக்குறைய சமமாக கேள்விகள் கேட்கப்படும்.  உதாரணமாக, 1 மதிப்பெண் பகுதி என்றால் 10 + 10 + 10 எனவும், 3 மதிப்பெண் பகுதி என்றால் 7 + 7 + 7  எனவும், 5 மதிப்பெண் பகுதி என்றால் 4 + 4 + 4 எனவும், 10 மதிப்பெண் பகுதி என்றால் 2 + 2 + 2 எனவும் கேள்வி எண் 69 வரை கேட்கப்படும். கரிம வேதியியல் 5 மதிப்பெண் கூடுதலாக கட்டாயக் கணக்கில் கேட்கப்படும்.

வினா எண் 70-இல் கனிம வேதியியல் d தொகுதியும், கரிம வேதியியல் ஹைடிராக்சில் வழிப்பொருளும் சேர்ந்து a, b  எனவும், கரிம வேதியியல் கார்பானில் சேர்மம் (c), இயற் வேதியியல் மின் வேதியியல்- I (Electrochemistry-I)(d) எனவும் கேட்கப்படும். முழு மதிப்பெண் பெறுவதற்கு நான்கு பாடங்களையும் தயார் செய்வது அவசியம். பொதுத் தேர்வின்போது எளிய வகையில் மதிப்பெண் குறையாதபடி வினாவைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

வேதியியல் பாடம் என்றாலே சமன்பாடுகள் மாணவர்களை பயமுறுத்தக்கூடும். மிகவும் அவசியம் எனப்படும் சமன்பாடுகளை சமன்செய்து எழுதினால்தான் முழு மதிப்பெண் கிடைக்கும். எனவே பாடப் பகுதிகளை எளிதாகப் புரிந்துகொண்டு படித்தால், அது எப்பகுதியாக இருந்தாலும் வெற்றி பெறுவது சுலபம்.

பாடவாரியாக 100 சதவீத மதிப்பெண்கள் பெற என்ன வழி என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

பாடம் 1: இந்தப் பாடத்திலிருந்து 1 மதிப்பெண் கேள்விகள் இரண்டும், 3 மதிப்பெண் கேள்வி ஒன்றும், 5 மதிப்பெண் கேள்வி ஒன்றும் (வினா எண் 52) கேட்கப்படும். 5 மதிப்பெண் கேள்வி, கணக்காக (Problem) இருக்க வாய்ப்புண்டு. டீ பிராக்ளே சமன்பாடு (அ) நிலையில்லா கோட்பாடு (Uncertainity principle) சார்ந்த கணக்காக இருக்கலாம். பாடப் பகுதியின் உள்ளிருந்து இனக் கலப்பு (Hybridisation), பிணைப்புத்தரம் (bond order) , ஹைடிரஜன் பிணைப்பு பகுதி போன்றவற்றை மனதில் வைத்து 1 மதிப்பெண் கேள்விகளுக்குத் தயாராகலாம். இப்பாடத்தினுள் அதிகபட்சமாக 5 மதிப்பெண் வினாக்கள் 6 உள்ளன.

பாடம் 2: 1 மதிப்பெண் (1), 3 மதிப்பெண் (1), 5 மதிப்பெண் (1) (வினா எண் 64 a) கேள்விகள் கேட்கப்படும். ஒரு மதிப்பெண் கேள்வி ஒன்று மட்டுமே உள்ளது என்று அலட்சியப்படுத்த வேண்டாம். எலெக்ட்ரான் நாட்டம் பகுதியில் அதிக எலெக்ட்ரான் நாட்டம் கொண்ட உலோகம் எது என்று பாடத்திற்குள் இருந்து ஏற்கெனவே பொதுத் தேர்வில் கேட்கப்பட்டதால், அதற்கேற்றார்போல் தயாராகவும். 3 மதிப்பெண் கேள்வி, கணக்காக வர வாய்ப்பு உள்ளது. உதாரணமாக Z+ (நிகர அணுக்கரு மின் சுமை) (effective nuclear charge) போன்றதும், முல்லிகன் அளவீடு (Mullikan Scale) மாதிரி கணக்கு (Solved example) போன்றதுமாக இருக்கலாம். 5 மதிப்பெண் கேள்விகள் அதிகபட்சம் 5 தயார் செய்யவேண்டும்.

பாடம் 3: 1 மதிப்பெண் (1), 3 மதிப்பெண் (2), 5 மதிப்பெண் (1) (வினா எண் 64 (b) கேள்விகள் கேட்கப்படும். மூன்று மதிப்பெண் பகுதியில் ஒன்று கட்டாயமாக பாஸ்பரஸ் சேர்மம் (Compounds of Phosphorous) பற்றிக் கேட்கப்படும். மற்றொன்று பிற பகுதிகளிலிருந்து கேட்கப்படும். மந்த இணை விளைவில் (inert pair effect)  தொடங்கி மந்த வாயுக்களின் பயன்கள் (Uses of rare gases)  வரை கேட்கலாம். அதிகபட்சமாக 5 மதிப்பெண் வினாக்கள் ஏழு ஆக இருக்கும்.

பாடம் 4: அதிக மதிப்பெண் கிடைக்கும் பாடம் இது. எளிதாக மதிப்பெண் பெற உதவும் பாடம் இதுதான். இதில் 1 மதிப்பெண் 2, 3 மதிப்பெண் 2, 5 மதிப்பெண் 1 (வினா எண் 53) கட்டாயக் கணக்கு வினா எண் 70 (a) or (b), 3 மதிப்பெண் பகுதியில் ஒரு வினா பொதுப்பண்புகள் தலைப்பில் உள்ள மாறுபட்ட அக்ஸிஜனேற்ற  நிலை போன்ற வினாவாக (variable oxidation state) இருக்கும். மற்றொரு 3 மதிப்பெண், சேர்மம் (compound) சார்ந்ததாக இருக்கலாம். கட்டாயக் கணக்கு பெரும்பாலும் ஐந்து உலோகங்களின் பண்புகள் (Properties of Metals) அல்லது சேர்மம் தொடர்பாக இருக்கும். வினா எண் 53 பெரும்பாலும் பிரித்தெடுத்தல் தொடர்பாக இருக்கும்.

பாடம் 5: தேர்வில் தேர்ச்சி அடைந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு இப்பாடம் வரப்பிரசாதம் என்பதால் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு நிச்சயமாக இப்பாடம் கடினமாக இருக்காது.  ஒரு மதிப்பெண் (2), 5 மதிப்பெண் (1) (வினா எண் 54). அதிகபட்சமாக 5 மதிப்பெண் வினாக்கள் நான்கு வரலாம்.

பாடம் 6: ஒரு மதிப்பெண் (1), 5 மதிப்பெண் (வினா எண் 55 மற்றும் வினா எண் 65 (a)யில் ஒரு 5 மதிப்பெண்). அதிகபட்சம் 5 மதிப்பெண்கள் எட்டு (அ) ஒன்பது என்று இருக்கும். IUPAC பெயரிடுதல் போன்ற பகுதியினை மனதில் தெளிவாக இருக்கும்படி தயார் செய்தல் அவசியம்.

பாடம் 7: ஒரு மதிப்பெண் 1,  மூன்று மதிப்பெண் 1, ஐந்து மதிப்பெண் 1 (வினா எண். 65 (b) கேட்கப்படும்.   3 மதிப்பெண் பகுதியில் கேட்கப்படும் கணக்கு (problem) பெரும்பாலும் இப்பாடத்திலிருந்தே வரும்.  உதாரணமாக அரை ஆயுட் காலம் (Half Life Period),    சராசரி ஆயுட்காலம் ( Average Life Time)  சமன்பாட்டில்  x ory  கணக்கிடுதல் மற்றும் அணு நிறை அடிப்படை கணக்குகள்  (Q மதிப்பு).  அதிகபட்சமாக 5 மதிப்பெண்  கேள்விகள் ஆறு இப்பாடத்திலிருந்து வரலாம்.

பாடம்  8: தேர்ச்சி அடைந்தால்போதும் என்று நினைப்பவர்களுக்கு இப்பாடம் மேலும் ஒரு வரப்பிரசாதம்.  ஒரு மதிப்பெண் வினாக்களில் 1,  3 மதிப்பெண்களில் 1, 5 மதிப்பெண்களில் 1 (வினா எண். 66(a) ) கேட்கப்படும்.  அதிகபட்சமாக 5 மதிப்பெண் வினாக்கள் ஆறு கேட்கப்படலாம்.  அயனிப்படிகத்தின் வகைகளில் AB வகையில் அணைவு எண் (Co-ordination number) சார்ந்த ஒரு மதிப்பெண் வினா, பாடப்பகுதிக்குள் கேட்கப்பட்டதை மனதில் வைத்து தயாராவது அவசியமானதாகும்.

பாடம்  9: தேர்ச்சி பெறத் தடுமாறும் சூழலில் உள்ளவர்களுக்கே இது மிகவும் எளிமையாக உள்ள பாடம்.  அதிக மதிப்பெண் பெறுவதற்கு கட்டாயம் உதவும் பாடம் இது.  ஒரு மதிப்பெண்ணிலிருந்து 2, மூன்று மதிப்பெண்ணிலிருந்து 1, ஐந்து மதிப்பெண்ணிலிருந்து 1 கேள்விகள் கேட்கப்படும்.  மூன்று மதிப்பெண் பகுதியில் கணக்கு கேட்கப்பட வாய்ப்பு அதிகம்.  உதாரணமாக டிரவுட்டன் விதி (Trountan’s rule)  எண்ரோப்பி (Entropy) அல்லது  திறன் (efficiency) கணக்காக இருக்கம்.  5 மதிப்பெண் வினாக்கள் அதிகபட்சம் 4 வர வாய்ப்புள்ளது (வினா எண். 56).

பாடம் 10:ஒரு மதிப்பெண் வினா 1, மூன்று மதிப்பெண் வினா 1, ஐந்து மதிப்பெண் வினா 1 (வினா எண்: 57) கேட்கப்படும். பாடத்திற்குள் 1 மதிப்பெண் வினா கேட்கப்படுவதாக இருந்தால் Q  சம்பந்தப்பட்ட ∆n கணக்கு, Kp, Kc-யின் அலகு தொடர்பாக அல்லது ஹேபர் முறை, தொடுமுறை சார்ந்த வினாவாக இருக்கலாம்.  மூன்று மதிப்பெண் வினா, கணக்கு தொடர்பாக இருக்கும். உதாரணமாக Kc = Kf / Kr  தொடர்பு பகுதி அழுத்தம் (partial pressure) உருவாதல் Kc (formation Kc), பிரிகை Kc (dissociation)  தொடர்பு கணக்காக இருக்கும்.  5 மதிப்பெண் வினாக்கள் அதிகபட்சமாக 5 (அ) 6 கேட்கப்படும்.

பாடம்  11:ஒரு மதிப்பெண் (1), மூன்று மதிப்பெண் (2), ஐந்து மதிப்பெண் (1) (வினா எண்: 58) என கேள்விகள் கேட்கப்படும்.  பாடத்திற்குள் 1 மதிப்பெண் என்றால்  உச் மதிப்பு வினைவேகத் தொடர்பு, கணக்கு (அரை ஆயுட்காலத் தொடர்பு பற்றி) கேட்கப்படும். 3 மதிப்பெண் பகுதிகளில் படிப்பதற்கு மிகக் குறைவான வினாக்கள் உள்ள பாடம் இது. அதே வேளையில் எளிமையான பாடம் இது. கணக்கு எனில் அரை ஆயுட் காலம் தொடர்புடையதாக இருக்கலாம்.  பாட இறுதிப் பகுதியான சிக்கலான வினை மற்றும் எளிய வினையில் குறைந்தது ஒரு 3 மதிப்பெண் கேள்வி கட்டாயமாக வரும். அதிகபட்சமாக ஐந்து மதிப்பெண் வினாக்கள்  5 வரலாம்.

பாடம்  12:அதிக அளவில் ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும் பாடங்களில் இதுவும் ஒன்று. மூன்று மதிப்பெண் கேள்வி 1, 5 மதிப்பெண் கேள்வி 1 (வினா எண் 66(b). மூன்று மதிப்பெண்களுக்காக தயார் செய்யவேண்டிய கேள்விகள் அதிகம் உள்ள பாடம் இது.  அதே போன்று ஐந்து மதிப்பெண் கேள்விகளும் அதிகம் உள்ளன.  இருப்பினும் மீண்டும் மீண்டும் கேட்கக்கூடிய வினாக்களாகிய வினைவேகமாற்றக் கொள்கை (Theories of catalysis)  கூழ்மப்பிரிப்பு (Dialysis), கூழ்மத் தயாரிப்பு (வேதி முறை)  போன்றவற்றை கூடுதல் கவனம் செலுத்தி நன்கு படித்துக் கொள்ளவும்.

பாடம் 13, 14: அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் அதிக கவனம் செலுத்திப் படிக்க வேண்டிய பாடங்கள் இவை.  பாடம் 13-இல் ஒரு மதிப்பெண் (1), மூன்று மதிப்பெண் (1), 5 மதிப்பெண் (1) ( வினா எண்.67(a) இடம்பெறும்.  மேலும் 70(d) கட்டாய கணக்கு கேள்வியாக இருக்கும்.  பாடம் 14-இல் 67(a) கட்டாய வினாவாக இருக்கும்.  வினா எண். 59 பாடம் 14-இல்  கேட்கப்படும் வினா பெரும்பாலும் கணக்காக (Problem) இருக்கும். கிப்ஸ் ஆற்றல் மாற்றம் = - nFE  தொடர்பு  மாதிரிக் கணக்கு (அ) நெர்ன்ஸ்ட்  சமன்பாட்டில் உள்ள மாதிரிக் கணக்குகளை தயார் செய்தால் போதும். வினா எண். 67(b)யில் அதிகபட்சம் 7 வினாக்கள் மற்றும் 67(b)யில் 6  வினாக்களுக்கும் தயார் செய்தால்போதும்.  வினா எண். 70(d)ஐ பொருத்தவரை பாரடேவிதி (Faradays law)  மாதிரிக் கணக்குகள் மற்றும் பயிற்சி வினாவும், கோல்ராஷ் விதி மாதிரிக் கணக்கு ஒன்று மற்றும் பயிற்சி வினா கடைசி கணக்கும், pH  பகுதியில் தீர்க்கப்பட்ட கணக்கு (solved problem)  ஐந்தும், ஹெண்டர்சன்  சமன்பாடு (Henderson equation) பகுதியில் தீர்க்கப்பட்ட கணக்குகள் இரண்டும் தயார் செய்தால் போதுமானதாக இருக்கும்.  இதையும் தாண்டி கேட்பதாக இருந்தால் சமமான கடத்துத்திறன் (equivalent conductance)  தொடர்புடைய தீர்க்கப்பட்ட கணக்குகளைத் தயார்செய்தால் போதும்.

பாடம்: 15: இப்பாடத்தில் ஒரே ஒரு மூன்று மதிப்பெண் வினா கேட்கப்படும். வினா எண். 68(a)யில் ஐந்து மதிப்பெண் கேட்கப்படும்.  பெரும்பாலும் இவ்வினாவை நன்கு தயார்செய்தால் மட்டும் போதும். 68(b) யானது பாடம்19-இல் கேட்கப்படும்.  அதிக சிரமப்பட்டு தயார்செய்ய வேண்டி இருக்கும். அதிகபட்சமாக  5 மதிப்பெண் கேள்வி 68(a)யில் 4 அல்லது 5 கேட்கப்படும். ஆனால் 68(b)யில் சிறு வினாக்கள் சேர்ந்து வருவதால் அதிக வினாக்களை தயார்செய்ய வேண்டி இருக்கும். பாடம் 19-இல் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் போதுமானதாக இருக்கும்.

பாடம்  16:கடல் போன்ற பாடம். ஆனால் கேட்கப்படும் வினாக்களின் அளவு மிகக் குறைவு.  இருப்பினும் வினா எண். 70-க்கு தயார் செய்யும் கட்டாயம் உள்ளது.  இதற்கு படிக்கும்போதே இரண்டு 3 மதிப்பெண்களை தயார்செய்து விடலாம்.  ஒரே ஒரு மதிப்பெண் வினா மட்டும் கேட்கப்படுகிறது.  அதற்கு  பயிற்சி வினாவை போட்டுப் பார்க்கவும். பாடப் பகுதியினுள் உள்ள அதிக முக்கியத்துவம் உள்ள வினாக்களையும் படித்துவைத்துக் கொள்ளவேண்டும்.  உதாரணமாக, மாற்றியம் (isomerism), பயன்கள், இயற்பியல் பண்புகள் குறிப்பாக பீனாலின் மணம் (phenols odour)  போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தினால் போதும்.

பாடம் 17:ஒரு மதிப்பெண் வினாக்கள் 2, ஐந்து மதிப்பெண் வினாக்கள் 1  (வினா எண்: 60) கேட்கப்படும். அதிகபட்சமாக ஐந்து மதிப்பெண் வினாக்கள் 6 கேட்கப்படும். குறிப்பாக டைஎதில் ஈதர்,   வேதிப் பண்புகள் காற்று (air), PCI5’ நீர்த்த H2SO4’HI  போன்றவற்றை அதிக கவனம் செலுத்தி தயார்செய்ய வேண்டியிருக்கும்.

பாடம் 18:இந்தப் பாடத்தை தயார்செய்ய ஆரம்பிக்கும்போதே மாணவர்கள் மனதில்  mechanism  எனப்படும் வினை வழிமுறை நினைவுக்கு வரவேண்டும்.  இப்பாடத்தில் 5 வினை வழிமுறையும் பாடம் 19-இல் 3 வினை வழிமுறையும் உள்ளன.  வினா எண் 61 அல்லது வினா எண் 62-இல் வினை வழிமுறை கேட்கப்படும்.  அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு தேவைப்படும் வினாவாக இது இருக்கும்.  பாடம் 18ஐப் பொருத்தவரை 3 மதிப்பெண் வினா ஒன்று கேட்கப்படும்.  இதற்கான தயாரித்தலில் அதிக கவனம் செலுத்தினால் (குறிப்பாக அசிட்டோன் வேதிப் பண்பு  பென்சால்டிஹைடு வேதிப்பண்பு, பார்மால்டிஹைடு, அசிட்டால்டிஹைடு முக்கிய வினைகள்) வினா எண் 70(c)க்கு பயனுள்ளதாக அமையும்.  ஒரேயொரு எளிதான ஒரு மதிப்பெண் வினா கேட்கப்படுகிறது (குறிப்பாக அசிட்டோன் பயன்கள்  சல்போனல்).

பாடம் 19:ஏற்கெனவே குறிப்பிட்டபடி தேவைப்பட்டால் மட்டும் இப்பாடத்தை தேர்ந்தெடுத்தால் போதும். ஒரு மதிப்பெண்  கேள்விகளுக்கு பாடத்தின் பின்பகுதி வினாக்களைப் பார்த்தால் போதும். இருப்பினும் சில வினாக்கள் பாடப்பகுதிக்குள் இருந்தும் கேட்கப்படலாம். உதாரணமாக, உணவுப் பதப்படுத்த உதவுவது, சோடியம் பென்சோவேட்.

பாடம்  20:பாடம் 12ஐப் போன்று அதிகபட்ச ஒரு மதிப்பெண் கொண்ட பாடம் (3 வினாக்கள் வரும்) இது. பெரும்பாலும் பாடத்தின் பின்பகுதியில் 2 வினாக்கள் வர வாய்ப்புள்ளது.  இருப்பினும் பாடத்திற்குள் ஏராளமான முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் உள்ளன. IUPAC  பெயர், மிர்பெண் எண்ணெய் போன்று நிறைய பகுதிகள் உள்ளன.  ஒரு மதிப்பெண் பகுதியை முழுமையாக முடித்தால் மற்றவைகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.  மூன்று மதிப்பெண் வினாக்களில் ஒன்று கேட்கப்படும். வினா எண். 69(a)யில் ஐந்து மதிப்பெண் கேள்வி கேட்கப்படும். 3 மதிப்பெண் பகுதி பெரும்பாலும் கணக்காக (problem) அமையும்.  உதாரணமாக (A) C6H7N கார்பைல் அமீன் வினைக்கு  உட்படும் ( ஓரினைய அமீன் C6H5NH2). A  நைட்ரஸ் அமிலம் / HCL உடன் வினைபட்டு B என்ற சேர்மம் கிடைக்கிறது (டையசோ ஆக்கல் வினை C6H5N2CI உருவாதல்) என இருக்கலாம்.

பாடம் 21: ஒரு மதிப்பெண் வினாக்கள் 2 உள்ளதால், இப்பாடத்தை கவனம் செலுத்திப் படிக்கவேண்டும்.  பெரும்பாலும் பாடத்தின்  பின்பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படலாம். இருப்பினும் லிபிட்  பகுதியில்  செபலின், காலக்டோ லிபிட் மற்றும் சமமின்புள்ளி (iso electric point) போன்று சில முக்கிய ஒரு மதிப்பெண்களை கவனித்தால் போதும். வினா எண் 69(b)ஐ தேவைப்பட்டால் மட்டும் தேர்ந்தெடுத்தால் போதும்.  அதிகபட்சம் 5 வினாக்கள் வர வாய்ப்புள்ளது.

பாடம் 22: தேர்ச்சி பெற்றால் போதும் என்று நினைப்பவர்களுக்கு  வரப்பிரசாதம் இப்பாடம்.  3 மதிப்பெண் வினாக்களில் 1 (வினா எண்-51), 5 மதிப்பெண் வினாக்களில் 1 (வினா எண் 63) கேட்கப்படும். மருத்துவ வேதியியலில் கவனம் செலுத்தினால் 3 அல்லது 5 மதிப்பெண்களை எளிதில் பெறலாம்.  பலபடிச்சேர்மம் (polymer) ராக்கெட் உந்தி போன்ற 5 மதிப்பெண் பகுதிகள் எளிமையாகத்தான் இருக்கும்.

மேற்கூறிய ப்ளூ பிரிண்ட்படி நன்றாகத் தயார்செய்து படித்தால் முழு மதிப்பெண் 150 / 150  பெறுவதில் எவ்வித சிரமமும் இருக்காது.

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு 30 நிமிடங்கள், மூன்று மதிப்பெண் கேள்விகளுக்கு 40 நிமிடங்கள், ஐந்து மதிப்பெண் கேள்விகளுக்கு 35 நிமிடங்கள், பத்து மதிப்பெண் கேள்விகளுக்கு 45 நிமிடங்கள் என  மொத்தம் 150 நிமிடங்கள் என வகுத்துக் கொண்டு திட்டமிட்டுத் தேர்வெழுதினால் மிக எளிதாக வெற்றியடையலாம்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் விடைகளை எழுதிப் பழகினால், தேர்வின்போது நேரத்தை திட்டமிட்டபடி கையாள்வது எளிதாக இருக்கும். பொதுத் தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருப்பதால், இப்போது படித்தாலும்கூட நூறு சதவீத மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவது சாத்தியம்தான்.


ஜி.ராதாகிருஷ்ணன்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி, காசிபாளையம், ஈரோடு.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1