பெரம்பலூர் மாவட்டத்தில் ஜன. 18 வரை ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம்!
தேசிய அடையாள அட்டை (ஆதார்) பெற, 2-ம் கட்டமாக கிராமம் மற்றும் வார்டு வாரியாக ஜன. 18-ம் தேதி வரை புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டைக்கான தகவல்களை பதிவு செய்யும் முதல் கட்ட முகாம் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து, 2-ம் கட்டமாக பெரம்பலூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டத்துக்குள்பட்ட பகுதியில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம், கைரேகை, விழித்திரை பதிவு செய்ய டிச. 13-ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
பெரம்பலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் 1 முதல் 21 வார்டுக்குள்பட்ட பொதுமக்கள், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பழைய நகராட்சி அலுவலகக் கட்டடத்திலும், பெரம்பலூர் குறு வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், பெரம்பலூர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் குரும்பலூரிலும், வேப்பந்தட்டை வட்டத்தைச் சேர்ந்த பசும்பலூர், வாலிகண்டபுரம், வெங்கலம் ஆகிய குறு வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் தங்களது பதிவினை மேற்கொள்ளலாம்.
2-ம் கட்ட முகாம்கள் கிராமம் மற்றும் வார்டு வாரியாக ஜன. 18-ம் தேதி வரை அனைத்து நாள்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். இந்த முகாம்கள் தங்களது பகுதியில் எந்தத் தேதியில் நடைபெறுகிறது என்பதை, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு தெரியப்படுத்துவார்கள். பதிவு செய்யும் பொதுமக்கள் அனைவரும், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புதல் சான்று அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்று, அசல் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி


0 comments