உயர் தொழில்நுட்ப, அதிநவீன புகைப்படக் கலை பயிற்சி பெற அழைப்பு!
பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், நவ. 4-ம் தேதி முதல் உயர் தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன புகைப்படக் கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து பயிற்சி மையத்தின் இயக்குநர் ஜி. பார்த்தசாரதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பயிற்சி மையத்தில், நவ. 4-ம் தேதி முதல் உயர் தொழில்நுட்ப மற்றும் அதிநவீன புகைப்பட கலை பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு படித்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக, சுய தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் உள்ளவர்களாக, அடிப்படை புகைப்படத் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து 10 நாள்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சி காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்குவதோடு, பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அளிக்கப்படும்.
பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள், பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, முகவரி, கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ரெங்கா நகர் (வாசுகி பால்ராஜ் மருத்துவமனை அருகில்) ஆத்தூர் சாலை, பெரம்பலூர் 621212, (தொலைபேசி 277 896) என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
Category: மாவட்ட செய்தி


0 comments