பெங்களூர் குண்டு வெடிப்பில் தவறாக கைது செய்யப்பட்ட 3 முஸ்லிம்களுக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு!
பெங்களூர், நவ 22–
பெங்களூர் குண்டுவெடிப்பில் தவறாக கைதான 3 முஸ்லிம்களுக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூர் மல்லேசுவரத்தில் பாரதீய ஜனதா அலுவலகம் அருகே கடந்த ஏப்ரல் மாதம் 17–ந்தேதி குண்டு வெடித்தது.


குண்டு வெடித்த இடத்தில் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிள் கிடந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய கர்நாடக போலீசார் தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவிகளான பீர்முகைதீன், சதாம்உசேன், தென்காசி ஹனீபா ஆகியோரை பிடித்துக் சென்றனர். ஒரு மாதம் வரை லாக்கப்பில் அடைத்து விசாரித்தனர். பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெங்களூர் போலீஸ் முதல் தகவல் அறிக்கையில் பீர் முகைதீன் முதல் குற்றவாளியாகவும், சதாம் 4–வது குற்றவாளியாகவும், ஹனீபா 17–வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். ஆனால் போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்த குற்ற பத்திரிகையில் இந்த 3 பேர் பெயர்களும் இடம் பெறவில்லை. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போலீசாரால் தகுந்த ஆதாரங்களை திரட்ட முடியவில்லை.
கடந்த அக்டோபர் 19–ந்தேதி இறுதி குற்றபத்திரிகை பெங்களூர் முதலாவது தலைமை மெட்ரோபாலிடன் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதை ஏற்க மறுத்த மாஜிஸ்திரேட்டு 3 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அக்டோபர் 28–ந்தேதி பீர்முகைதீன் மட்டும் விடுதலை செய்யப்பட்டார். மற்ற இருவரும் தொடர்ந்து சிறையிலேயே இருக்கிறார்கள்.
3 பேரையும் சட்ட விரோதமாக சிறையில் அடைத்ததை எதிர்த்து கர்நாடக மனித உரிமை கமிஷனில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுபற்றி மனித உரிமை கமிஷன் விசாரித்து 3 பேருக்கும் தலா ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது. 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்த கர்நாடக போலீசார் மீது மனித உரிமை கமிஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே பெங்களூர் சிறையில் வாடும் ஹனீபா, சதாம் உசேன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாக மதுரையைச் சேர்ந்த வக்கீல் அப்துல்கலாம் பகதூர்ஷா தெரிவித்துள்ளார்.


Category: சமுதாய செய்தி


0 comments