திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் கடும்கெடுபிடி கடத்தல் தங்கம் பிடிப்பதற்காக தாலியை கூட சோதனையிடுவதாக புகார்!
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பிடிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடம் தாலியை கூட சோதனையிடுவதாக புகார்கள் கூறப்பட்டு உள்ளன.
திருச்சி விமான நிலையம்
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்களை இயக்கும் விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் விளங்கி வருகிறது. திருச்சியில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் திருச்சி தமிழகத்தின் மத்திய பகுதியாக இருப்பதால் அரபுநாடுகளில் தொழிலாளர்களாக வேலை செய்யும் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் மதுரை, ராமநாதபுரம் உள்பட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் தங்களது வெளிநாட்டு பயணத்திற்கு விமானம் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் திருச்சியையே தேர்ந்து எடுக்கிறார்கள். இதன் காரணமாக திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ரூ.3½ கோடி தங்க கட்டிகள் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தின் செயல்பாடுகள் அதிகரித்ததை தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து வரும்பயணிகளின் நடவடிக்கைகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கடந்த 3 மாதங்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய பயணிகளிடம் இருந்து ரூ.3½ கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. விதிமுறைகளை மீறி தங்கம் கடத்தி வரும் பயணிகள் சுங்க இலாகா அதிகாரிகளின் கழுகு பார்வையில் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கி கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
‘தாலி‘க்கும் சோதனையா?
அதே நேரத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கடத்தல் தங்கம் மற்றும் நகைகளை பிடிக்க சோதனை என்ற பெயரில் கடுமையான கெடுபிடியாக நடந்து கொள்வதாக புகார்களும் வந்து உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் துபாயில் இருந்து வந்த குமார் என்ற பயணி சுங்க இலாகா அதிகாரிகளின் கெடுபிடி சோதனைகள் பற்றி உயர் அதிகாரிகளிடம் புகார் செய்து உள்ளார். சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றும் நகைகளுக்கு முறையான ரசீது கொடுப்பது இல்லை, சோதனை என்ற பெயரில் பெண் பயணிகள் அணிந்து வரும் மிகவும் புனிதமானதும் நமது பண்பாட்டின் அடையாளமாகவும் மதிக்கப்படும் ‘தாலி‘யை கூட விட்டு வைப்பது இல்லை, அதனையும் தொட்டு பார்த்து சோதனை செய்கிறார்கள் என கூறி உள்ளார்.
இப்படி கெடுபிடி சோதனைகள் நடப்பது உண்மைதானா? என சுங்க இலாகா அதிகாரிகளிடம் ‘தினத்தந்தி‘ நிருபர் கேட்டதற்கு அவர்கள் தெரிவித்ததாவது:–
எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்?
வெளிநாடுகளில் ஒரு ஆண்டும் அதற்கு மேலும் தங்கி விட்டு இந்தியா திரும்பும் பயணிகள் ஆணாக இருந்தால் ரூ.50 ஆயிரம் மதிப்பிற்கும், பெண்ணாக இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கும் தங்க நகை எடுத்து வரலாம் என விதிமுறை உள்ளது. இதற்கு அதிகமாக கொண்டு வரப்படும் நகைகளுக்கு தான் வரி விதிக்கப்படுகிறது. சுற்றுலா நோக்கில் வெளிநாடு சென்று திரும்பும் பயணிகள் கொண்டு வரும் நகைகளுக்கு 36 சதவீத வரி விதிக்கப்படுகிறது. கைப்பற்றப்படும் நகைகள் அனைத்தும் வழக்கு முடியும் வரை சென்னை கொண்டு செல்லப்பட்டு ரிசர்வ் வங்கி பாதுகாப்பில் வைக்கப்படும்.
சோதனை ஏன்?
கைப்பற்றப்படும் எந்த ஒரு பொருளுக்கும் சுங்க இலாகா ரசீது வழங்கி வருகிறது. ரசீது வழங்கவில்லை என்றால் விமான நிலையத்திலேயே உள்ள உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யலாம். சுங்க இலாகா அதிகாரிகளின் சோதனைகள் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. வெளிப்படையான சோதனைகள் தான் நடத்தப்படுகின்றன. இமெயில் மூலமும் புகார் செய்யலாம். வெளிநாடு செல்வதற்கு முன்பாக ஒவ்வொரு பயணியும் அணிந்து செல்லும் நகைகள் பற்றிய விவரங்களை அதற்குரிய படிவத்தில் எழுதி கொடுத்து விட்டு தான் செல்கிறார்கள். திரும்பி வரும்போது அவை சரியாக இருக்கிறதா? கூடுதலாக அணிந்து வந்து இருக்கிறார்களா? என சோதனை செய்வது எங்கள் கடமை. அதனை தான் நாங்கள் செய்கிறோம்.
தங்கம் விலை இந்தியாவில் அதிகம்
பெண்கள் அணிந்து இருக்கும் தாலிச்செயின் புதிதா? பழையதா? என்பதை சோதனை செய்வோம். எங்களை பொறுத்தவரை அதனை நாங்கள் தங்கமாக தான் பார்க்கிறோம். உலக அளவில் ஏற்பட்டு உள்ள பொருளாதார சரிவை தொடர்ந்து வெளிநாடுகளில் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் தங்கத்தின் விலை ஏற்றமாக இருக்கிறது. இதனால் தான் அதிக அளவில் தங்கத்தை விதிமுறைகளை மீறி கடத்தி கொண்டு வருகிறார்கள். அதனை நாங்கள் சட்டப்படி பிடித்து பறிமுதல் செய்து வருகிறோம். மற்றபடி நாங்கள் வேறு எந்த கெடுபிடியும் செய்வது கிடையாது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Category: மாநில செய்தி


0 comments