சென்னை: மினி பஸ் சேவையை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!
சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்களை வழங்கியும், மினி பஸ்கள் மற்றும் புதிய பேருந்துகள் சேவையை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேருந்து சேவையை துவக்கி வைத்து முதலவர் ஜெயலலிதா பேசியது:
முந்தைய தி.மு.க. ஆட்சியின் நிதி நிர்வாக சீர்கேட்டினால், பல பேருந்துகள் இயக்க இயலாத நிலையில் இருந்தன. மொத்தத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடங்கிப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு போக்குவரத்துக் கழகங்களை திறம்பட செயல்படுத்திட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி உதவி அளித்தல்,
புதிய பேருந்துகளை வாங்குதல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், போன்ற பல்வேறு ஆக்கப்பூர் வமான நடவடிக்கைகளை எடுத்தேன். தகுதியற்ற பேருந்துகளுக்கு மாற்றாக புதிதாக 1,026 கோடி ரூபாய் செலவில் 6000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 3,051 பேருந்துகள் வாங்கப்பட்டு தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல், அடிச்சட்டம் மற்றும் எஞ்சின் நல்ல நிலையில் உள்ள 483 பேருந்துகள் 34 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் பேருந்துகளின் பராமரிப்பிற்காக புதிதாக 68 பணிமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொலைதூர தடங்களுக்கு மின்னணுப் பயணச் சீட்டு முன் பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
16,661 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில் நுட்பப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பணியில் இருக்கும் போது இறந்து போன பணியாளர்களின் 346 வாரிசுகள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். 9,157 பதிலி பணியாளர்களின் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நலன் கருதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தைப் பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
விளம்பர வருவாய் ரூ.28 கோடி
பேருந்துகளில் விளம்பரம் செய்வதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 28 கோடியே 13 லட்சம் ரூபாய் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
இதே போன்று அஞ்சல் சேவைகளை அறிமுகப்படுத்தியதன் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 44 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது தவிர பயண வழி உணவகங்கள் மூலமாக 4 கோடியே 67 லட்சம் ரூபாய் வருமானத்தை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஈட்டியுள்ளன.
அதே சமயத்தில் டீசல் விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்திக் கொண்டே செல்வதன் காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை மக்கள் மீது சுமத்தாமல் இருக்கும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த ஆண்டு 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பாண்டிலும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியம்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக செப்டம்பர் 2010 முதல் மார்ச் 2011 வரை ஓய்வு பெற்ற, 2,316 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக 47 கோடியே 71 லட்சம் ரூபாயும் ஏப்ரல் 2011 முதல் செப்டம்பர் 20 11 வரையிலான காலத்தில் ஓய்வுபெற்ற 2,337 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக 52 கோடியே 48 லட்சம் ரூபாயும் என மொத்தம் 4,653 ஓய்வூதியதாரர்களுக்கு 100 கோடியே 19 லட்சம் ரூபாய்க்கான ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்துகள்
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 610 புதிய பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர மக்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 50 சிற்றுந்துகள் ஆகியவற்றை நான் இங்கே துவக்கி வைக்கிறேன்" என்றார் முதலவர் ஜெயலலிதா.
மினி பஸ் வழித்தடங்கள் விவரம்:
சென்னையில் 50 சிறிய பஸ்களை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கிவைத்தார். அவை குறிப்பிட்ட வழித்தடங்களில் உடனடியாக ஓடத் தொடங்கின. சிறிய பஸ்சில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5. அதற்குமேல் 6 ரூபாய், 8 ரூபாய் என்று வசூலிக்கப்படும்.
சிறிய பஸ்சில் 27 பேர் உட்கார்ந்து செல்லலாம். வடபழனி - கோயம்பேடு பஸ் நிலையம் வழித்தடத்தில் மட்டும் அதிகபட்சமாக 4 சிறிய பஸ்களும் மற்ற வழித்தடங்களில் 2 அல்லது 3 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பஸ் - ரயில் நிலையங்கள் இணைப்பு
சென்னை புறநகர் பகுதியில் இருந்து நகரில் உள்ள பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சிறிய பஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்கள் விவரம் வருமாறு:
குரோம்பேட்டை வழித்தடம்
எஸ் 1 - பல்லாவரம் ரயில் நிலையம் - திரிசூலம் சக்தி நகர். வழி: பழைய பல்லாவரம், யூனியன் கார்பைடு காலனி, திரிசூலம் சக்தி நகர்.
எஸ் 2 - குரோம்பேட்டை - மேடவாக்கம். வழி: இந்திரா கார்டன், நேரு நகர், குமரன் குன்றம், அஸ்தினாபுரம், திருமலைநகர், ஜெயேந்திரர் நகர், செம்பாக்கம், கவுரிவாக்கம்.
எஸ் 3 - குரோம்பேட்டை - மாடம்பாக்கம். வழி: சிட்லபாக்கம், மகாலட்சுமி நகர், ராஜகீழ்ப்பாக்கம், கோழிப்பண்ணை, மாடம்பாக்கம்.
எஸ் 4 - குரோம்பேட்டை - மேடவாக்கம். வழி: குரோம்பேட்டை, எம்ஐடி, நேருநகர், குமரன் குன்றம், பல்லவன் பயிற்சிப் பள்ளி, ராதா நகர், நெமிலிச்சேரி, நன்மங்கலம், கோவிலம்பாக்கம்.
பெருங்களத்தூர்
எஸ் 5- பெருங்களத்தூர் அருங்கால். வழி: ஊரப்பாக்கம், காரணை புதுச்சேரி, காரணை காட்டூர், அருங்கால்.
எஸ் 11 - கிண்டி ஆசர்கானா - கீழ்க்கட்டளை. வழி: சிமென்ட் ரோடு, மீனம்பாக்கம், பி.வி.நகர், பர்மா காலனி, மூவரசன்பேட்டை, மடிப்பாக்கம் கூட்டுரோடு.
எஸ் 12 - கிண்டி ஆசர்கானா - என்.ஜி.ஓ.காலனி. வழி: மவுண்ட் தபால் நிலையம், எம்.கே.என்.சாலை, ஆதம்பாக்கம், ஜெயலட்சுமி திரையரங்கம், நியூ காலனி மெயின் ரோடு, கக்கன் பாலம்.
கிண்டி
எஸ் 13 - கிண்டி - வேளச்சேரி. வழி: மடுவங்கரை, என்.ஜி.ஓ.காலனி, பிருந்தாவன்நகர், மகாலட்சுமி நகர், உள்வட்டச் சாலை, வேளச்சேரி ரயில் நிலையம்.
எஸ் 14 - எஸ்.ஆர்.பி.டூல்ஸ் - மேட்டுக்குப்பம். வழி: தரமணி, சி.டி.எஸ்., அம்பேத்கர் நகர், காமராஜ் நகர், டெலிபோன் நகர், எல்லையம்மன் நகர்.
எஸ் 21 - ராமாபுரம் - போரூர். வழி: ராமாபுரம் அரசமரம், பூத்தபேடு, சின்ன போரூர், காரம்பாக்கம்.
எஸ் 22 - போரூர் - பட்டூர். வழி: ராமச்சந்திரா மருத்துவமனை, அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையம், பரணிபுத்தூர் சந்திப்பு.
எஸ் 23 - அய்யப்பன்தாங்கல் - குமணன்சாவடி. வழி: எஸ்எஸ்டி ஆயில் மில், நூம்பல் சாலை சந்திப்பு, புளியமேடு, குமணன்சாவடி.
எஸ் 24 - அய்யப்பன்தாங்கல் - திருவேற்காடு. வழி: எஸ்.ஆர்.எம்.சி., சத்யலோக் குருகுலம், செட்டியார் அகரம், சிவபூதமேடு, வேலப்பன்சாவடி.
மதுரவாயல்
எஸ் 25 - மதுரவாயல் - வளசரவாக்கம். வழி: ஆலப்பாக்கம் மதுரவாயல் சந்திப்பு, மீனாட்சி பல் மருத்துவக் கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.மோட்டார்ஸ், ஆற்காடு சாலை, ஆலப்பாக்கம் சாலை சந்திப்பு.
வடபழனி
எஸ் 31 - வடபழனி - கோயம்பேடு பஸ் நிலையம். வழி: ஆவிச்சிப் பள்ளி, விருகம்பாக்கம், கேசவர்த்தினி, தேவி குப்பம், கங்காநகர், பள்ளிக்கூடத் தெரு, மதுரவாயல் ஏரிக்கரை.
எஸ் 32 - வடபழனி - திரு.வி.க.பூங்கா. வழி: ராம் தியேட்டர், பெஸ்ட் மருத்துவமனை, வன்னியர் தெரு, பெரியார் பாதை, அண்ணா நெடுஞ்சாலை, அருண் ஓட்டல், அமைந்தகரை.
அசோக் பில்லர்
எஸ் 33 - அசோக் பில்லர் மேத்தா நகர். வழி: புதூர் உயர்நிலைப்பள்ளி, சாமியார் மடம், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ், பொன்மணி திருமண மண்டபம், கீழ்நகர், திருவள்ளுவர்புரம்.
எஸ் 41 - அம்பத்தூர் ஓ.டி. - முருகப்பா பாலிடெக்னிக். வழி: வள்ளுவர் சாலை சந்திப்பு, குளக்கரை சாலை சந்திப்பு, திருமுல்லைவாயில் சந்திப்பு, ஸ்டேட்போர்டு மருத்துவமனை.
மாதவரம்
எஸ் 61 - மாதவரம் - ரெட்டேரி சந்திப்பு. வழி: கல்பனா லேம்ப், பிருந்தா கார்டன், பிரகாஷ் நகர், குமரன் நகர் சந்திப்பு, கொளத்தூர்.
எஸ் 62 - மூலக்கடை - மணலி. வழி: அம்பேத்கர் சிலை, ஆர்.வி.நகர், பார்வதி நகர், மூலச்சத்திரம், பல்ஜிபாளையம், சின்னசேக்காடு, மணலி மார்க்கெட். மொத்தம் 50 சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை மாநகர மக்களின் 4 ஆண்டுகள் கனவு நனவாகியுள்ளது.
Category: மாநில செய்தி

0 comments