பாராளுமன்ற தேர்தலில் இந்திய முஸ்லீம் லீக் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி: காதர் மொய்தீன் பேட்டி!
“பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாடு சென்னை பெரியார் திடலில் அக்டோபர் மாதம் 5ந் தேதி நடக்கிறது. இதில் மாணவர் பேரவை பிரதிநிதிகள் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள்.
மாநாட்டில் கல்வி பிரச்சினை, வங்கிகளில் கல்வி கடன் வழங்கும் பிரச்சினை, இந்தியாவில் புதிதாக தொடங்கப்பட உள்ள 5 பல்கலைக்கழகங்களில் ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானம் நிறைவேற்றப்படும்.
சமீப காலமாக மாணவர்களிடையே தாக்குதல், பாலியல் பலாத்காரம் போன்றவை நடக்கிறது. இதுபோன்ற ஒழுக்க கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் அனைத்து மதங்களிலும் உள்ள பொது நெறிகள் போதிக்க வேண்டும்.
தற்போது நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தி அதிக பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் குஜராத்தில் சிறு பான்மையின மக்கள் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் வருத்தம் தெரிவித்து பேசவில்லை.
இந்திய அரசியலில் பின் பற்றி வந்த பாரம்பரியம், பண்பாடு மோடியின் பேச்சில் இல்லை. தமிழகத்தில் ஜனநாயக சமய சார்பற்ற அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சி. வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நாங்கள் சேர்ந்து போட்டியிடுவோம்.
உலகில் 57 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தவிடாமல் தடுத்தால், ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என நம்புகிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் வருகிற 28ந் தேதி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Category: சமுதாய செய்தி
0 comments