பெண்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்க "அகழி' மையத்தில் புகார் அளிக்கலாம்
பெண்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்க, "அகழி' மையத்தில் புகார் அளிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட்சியர் மேலும் பேசியது:
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் வகையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பெண்களின் பாதுகாப்பு மையமான "அகழி' மையம் கடந்த 18.1.2013-ல் முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மாவட்ட ஆட்சியரின் துணைவியார் கெüரவ ஆலோசகராகவும், சமூகநலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், வருவாய்த் துறை, காவல் துறை, நீதித்
துறை, மருத்துவத் துறை, கல்வித் துறை, புதுவாழ்வுத் திட்டம் ஆகிய துறைகளின் அலுவலர்கள் உறுப்பினர்களாகவும், விபு தொண்டு நிறுவனம் மற்றும் கல்லூரி மாணவர்கள் பிரதிநிதிகளாகவும் உள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் எண்ணத்தை நிறைவேற்றிடும் வகையில், பெரம்பலூர் மாவட்ட பெண்களுக்கு பாதுகாப்பு வளையமாக அகழி மையம் செயல்பட்டு வருகிறது.
இதுவரை, பெண்களை கிண்டல் செய்த வகையில் 11 புகார்கள் அகழி மையத்தில் பெறப்பட்டுள்ளது. இதில், ஒரு புகாருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு, 5 புகார்களுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, பெண்களுக்கு எதிரான குற்றங்களை 86755 29529, 89033 34242 ஆகிய எண்களிலும், நேரடியாகவும் புகார் அளிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், காவல் துறையின் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களான பாலியல் பலாத்காரம், வரதட்சிணை கொடுமை, வன்கொடுமை, ஈவ் டீசிங், கடத்தல், கணவனால் துன்புறுத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 194 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றம் மற்றும் காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ.சுப்பிரமணியன், துணை கண்காணிப்பாளர் ஆர்.சுகாசினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments