.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

“பத்ரு” களம்…! தரும் படிப்பினை!

Unknown | 5:00 PM | 0 comments

Post image for “பத்ரு” களம்…! தரும் படிப்பினை!
 இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய “பத்ரு” போர் ரமழான் 17ல் நடைபெற்றது. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது. சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய அந்த “பத்ரு” போரின் வயது இன்றைக்குச் சற்றொப்ப 1432 ஆண்டுகள். இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் அறப் போராட்டத்தில் அயராது ஈடுபடும் நெஞ்சுரத்தை அளிப்பதற்காகவே இஸ்லாமிய வழிபாடுகள் அனைத்தும் விதியாக்கப்பட்டுள்ளன. எனவேதான் நோன்புக்கும் அறப்போருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
எழுபது ஒட்டகங்களையும் இரண்டு குதிரைகளையும் மிகக் குறைந்த ஆயுத வசதிகளையும் கொண்ட 313 முஸ்லிம்கள், ஆயுதம் தாங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைஷ்களை எதிர்த்தனர் என்றால், அந்த முஸ்லிம்களின் நெஞ்சுறுதியையும் இறை நம்பிக்கையையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நோன்பு வைத்துள்ளோமே இச்சமயத்தில் எப்படிப் போராடுவது என்றெல்லாம் அவர்கள் தயங்கிக் கொண்டிருக்கவில்லை. இறை நெறிக்கு ஓர் ஆபத்து என்ற போது தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை.
இறைவன் அளித்த உயிர் அவனுடைய மார்க்கத்திற்காக அவனுடைய வழியிலேயே அர்ப்பணமாவதை நபிதோழர்கள் பெரும் பேராய்க் கருதினார்கள். இறைநெறியை நிலை நாட்டுவதையும் அதற்காக உழைப்பதையும் மையமாகக் கொண்டே அவர்களின் வாழ்க்கை சுழன்றது. அந்த 313 முஸ்லிம்களின் வாழ்வோடு எதிர்கால இஸ்லாத்தின் வாழ்வும் வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருந்தன. இறைநெறியை அழிக்க முனைந்தோரை எதிர்த்துப் போரிடும்படி இறைக்கட்டளை கிடைத்த உடனேயே அந்த சிறுபான்மை சத்தியக் குழுவினர் போருக்குத் தயாராகிவிட்டனர். ஆர்ப்பரித்து வரும் குறைஷ்களின் படையை எந்த இடத்தில் சென்று சந்திப்பது என்று அல்லாஹ்வின் தூதர் அவர்களும் தோழர்களும் கலந்து ஆலோசித்தனர். பல போர்த் திட்டங்களை வகுத்தார்கள். போருக்காக இஸ்லாமியப் படைகள் முகாமிடும் இடங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஓரிடத்தில் முகாம் போட்டுத் தங்க முடிவு செய்த போது நபிதோழர்களில் ஒருவர் இது இறை அறிவிப்பா அல்லது தங்களின் சொந்த முடிவா என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது இறை அறிவிப்பு அல்ல, என் சொந்த முடிவு’ என்று கூறியதும், அந்த நபி தோழர் தண்ணீர் வசதியுள்ள மற்றோர் இடத்தைக் குறிப்பிட்டு அங்கு சென்று முகாமிடலாம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்களும் அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட்டார்கள் அத்துடன் எதிரிகளின் போர் நிலைகளையும், தந்திரங்களையும் வேவு பார்த்து வருவதற்காக ஒற்றர்களையும் அனுப்பி வைத்தார்கள்.
“பத்ரு” போர் களத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த படைத் தளபதியாகச் செயல்பட்டார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் குறிப்பிட்டுள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்கள் அறிவை மட்டுமே பெரிதாக எண்ணாமல் அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருந்தார்கள். இறைவனிடம் இருகையேந்தி இறைஞ்சினார்கள். “இறைவா! எங்களுக்கு துணை புரிவதாக நீ அளித்த வாக்கை நிறைவேற்று. சத்தியத்திற்காகப் போராடும் இந்தச் சிறுகுழு இன்று அழிந்து விட்டால் இனி உலகில் உன்னை வணங்கிட எவரும் இருக்க மாட்டார்கள்’ என உருக்கமாக பிரார்த்தனை செய்தார்கள்.
அபூபக்கர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் அருகில் வந்து, “அல்லாஹ்வின் உதவி நமக்கு நிச்சயம் உண்டு; கலங்காதீர்கள்’ என்று ஆறுதல் கூறினார். அந்த சிறுபான்மை சத்தியக் கூட்டம் “நாங்கள் இறைவனுக்காகவே’ என்று முழுமையாக முன்வந்தபோது இறைவனும் தன் அருளைப் பொழியத் தொடங்கினான். போர் நடைபெறும் வேளையில் மழை பெய்வித்தும், வானவர்களை அனுப்பியும் இன்னும் பல்வேறு வடிவங்களில் அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்தான். அவர்களின் பாதங்களை வலுப்படுத்தி இறுதி வெற்றியையும் அளித்தான். நபியவர்களோ, நபிதோழர்களோ இந்த வெற்றி குறித்து சிறிதும் கர்வம் கொள்ளக்கூடாது என்பதற்காக இறைவன் பின்வரும் குர்ஆன் வசனத்தை அருளினான். “உண்மையாதெனில், நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். மேலும் (நபியே!) நீர் எறிந்தபோது, உண்மையில் எறிந்தது நீரல்லர்; மாறாக அல்லாஹ்தான் எறிந்தான். (8:17)
இந்த அருள்நெறி வசனங்களுக்கேற்ப அந்த ஆரம்ப கால முஸ்லிம்களும் விளங்கினார்கள். அவர்கள் தங்களின் அறிவையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்தியே போரிட்டனர் என்றாலும், அவற்றைக் கொண்டுதான் வெற்றி பெற்றோம் என்று சிறிதும் கர்வம் கொள்ள வில்லை. இறையருளின் துணைகொண்டே வெற்றி பெற்றோம் என்று உறுதியாக நம்பினர். இறைவனுக்கு நன்றியும் செலுத்தினர். இவ்வாறு அனைத்து பண்புகளையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்து சமநிலைப் படுத்தியது “பத்ரு” போரின் தனிச்சிறப்பாகும். “”பத்ரு” போரில் எந்தெந்த நியதிகளைக் கடைபிடித்ததால் இறை யுதவி அவர்களுக்கு கிடைத்ததோ அந்த இறை நியதிகள் எந்தவித மாற்றமும் இன்றி இன்று வரை அப்படியே உள்ளன. தன்னுடைய அளவற்ற அருட்கொடைகளின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு இறைவனும் வழங்கக் காத்திருக்கிறான். ஆனால்…
அந்த இறை நெறிகளைப் பின்பற்ற நம்மில் ஒருவரேனும் உண்டா? இறைவனின் அருட் கொடைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வம் நம்மில் எத்தனைப்பேரிடம் இருக்கிறது? நம் உள்ளத்தைத் தொட்டுப் பார்த்துப் பதில் சொல்ல வேண்டும். இன்றுகூட இறைநெறியை -இஸ்லாத்தை முழுமையாக நிலைநாட்டும் பணி நம் முன் உள்ளது. பத்ரு தோழர்களிடம் இருந்த அதே துடிப்பும், உணர்ச்சியும் இன்று நமக்கும் தேவைப்படுகிறது. இறைநெறியை நிலைநாட்டியே தீருவோம் எனும் உறுதியோடு நம்மிடம் இருக்கும் வாய்ப்பு வசதிகளையும் ஏன் தேவைப்பட்டால் நமது உயிர்களையும் கூட இறைவழியில் அர்ப்பணிக்கத் தயாராகி விடவேண்டும். அதற்காக  இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான செயல்களில் சுய விளக்கம் கூறி ஒருபோதும் ஈடுபடக் கூடாது. அப்படி இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடந்தால் இறையுதவி எப்படியெல்லாம் கிடைக்கிறது என்பதை நாம் நம் கண்களாலேயே கண்டு கொள்ளலாம். 1432 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற “பத்ரு” போரை இன்று நினைவூட்டுவதன் நோக்கம், நம்முடைய உள்ளத்திலும் சத்திய வேட்கை கொழுந்து விட்டெரிய வேண்டும் என்பதற்காகவே. அந்த சத்தியச் சுடர் நமது செயல்களில் வெளிப்பட்டு சுற்றியுள்ள தீமைகளை எல்லாம் சுட்டுக் கரித்து விட்டு ஓர் ஒளிமிக்க புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே!
“பத்ரு” போரிலிருந்து கிடைக்கும் படிப்பினை:
“பத்ரு” போர் தரும் படிப்பினைகளை நம் உள்ளத்தில் பதியவைக்க வேண்டும். (1) பெரும் பான்மை மக்கள் ஒரு விவாதத்தை ஏற்றுக் கொள்வதால் அது சத்தியமாகிவிடாது. அவர்கள் ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அது அசத்தியமாகிவிடாது. சத்திய வாதிகள் சிறுபான்மையினராய் இருந்தாலும் இறைவன் சத்தியவாதிகளுடன்தான் இருப்பான்.
(2) இறை நம்பிக்கை கொண்ட பிறகு, இறைவனின் கட்டளைகளுக்கும் இறைத் தூதரின் கட்டளைகளுக்கும் கீழ்படியத் தயங்குவது உள்ளத்தின் நயவஞ்சகமாகும். இறைவன் இத்தகையவர்களை விரும்புவதில்லை, வெறுக்கிறான்.
(3) இந்த நயவஞ்சகத் தன்மையும் கோழைத் தனமும் போலி வாதமும் ஒழிய வேண்டுமானால், இறைவன் நம் உள்ளத்தின் இரகசியங்களை அறிகின்றான் என்ற சிந்தனையும் அவன் முன்னிலையில் மறுமையில் நாம் நிற்க வேண்டியுள்ளது எனும் உறுதியான நம்பிக்கையும் வேண்டும். செல்வம், சந்ததிகள் மீதுள்ள பேராசைதான் இறை வழியில் தியாகம் செய்ய தயக்கத்தையும், கோழைத்தனத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே இவ்விரண்டையும் இறை நம்பிக்கையாளர்களை சோதிக்க இறைவனால் அளிக்கப்பட்ட சோதனைப் பொருட்கள் என உணர்ந்து இறை நம்பிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
(4) சத்திய வழி நடப்போர் பலவீனர்களாய் இருந்தபோதிலும் அசத்தியவாதிகள் எவ்வளவு தான் பலமுள்ளவர்களாய் இருந்தபோதும் சூழ் நிலைகளை மாற்றி சத்தியவாதிகளுக்குப் பாதுகாப்பையும் வெற்றியையும் அளித்திட இறைவனால் முடியும். “பத்ரு” போரில் வானவர்களைக்கொண்டு இறை நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிந்ததன் மூலம் இறைவன் அதனைச் செய்தும் காட்டிவிட்டான். அதற்காக இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். இறை மறுப்பாளர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டனர். எனவே இறைவன் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தான்.
(5) இறை வழியில் தியாகம் செய்வது ஓர் இறைவணக்கமே.
இந்த உணர்வுகள், படிப்பினைகள் என்றும் பசுமையோடு இருக்க “பத்ரு” போர் நிகழ்ச்சிகள் நமக்கு என்றென்றம் படிப்பினையாக இருக்கட்டும்! வல்ல அல்லாஹ் போதுமானவன்.
அபூ யாசிர், உடன்குடி

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1