கல்வி உதவித்தொகை பெறமாணவர்களுக்கு அழைப்பு
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) புகழேந்தி வெளியிட்ட அறிக்கை:ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 8ம் வகுப்பு தேர்வில் 2012-13ம் கல்வியாண்டில் 50 சதவீத மொத்த மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த மாணவர்களிடையே திறமை மிக்கவர்களை தேர்ந்தெடுத்து 9ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை உள்ள உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி படிப்புக்கான உதவித்தொகையாக ஆண்டுதோறும் 1,000 ரூபாய் வீதம் 50 மாணவர்கள், 50 மாணவிகள் என மொத்தம் 100 பேருக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் 100 மாணவ, மாணவிகளை தேர்வு செய்ய ஊரக பகுதிகளில் உள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான திறனாய்வு தேர்வு வரும் செப்டம்பர் 22ம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது.பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2012 - 2013ம் கல்வியாண்டில் 8ம் வகுப்பு பயின்று ஆண்டு இறுதி வகுப்பு தேர்வில் 50 சதவீத மொத்த மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்து, நடப்பு 2013 - 2014ம் கல்வியாண்டில் 9ம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வு திட்டத்திற்கு தகுதியானவர்கள்.இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்காக மாணவர்கள் வருவாய்த் துறையிலிருந்து பெற்றோரின் வருமானச் சான்று பெற்று அளிக்க வேண்டும். தற்போது 9ம் வகுப்பு பயிலும் தகுதியுள்ள மாணவர்கள் இதற்கான விண்ணப்ப்படிவத்தை இணையதள முகவரியிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.பிறகு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வருவாய்த்துறை சான்றிதழ், மாணவர் கல்வி பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரின் கையொப்பம் பெற்று வரும் ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Category: கல்வி


0 comments