.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு.

Unknown | 5:30 PM | 0 comments

tngovமத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது. இதற்காக ஆன்–லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
சூரிய மேற்கூரை மின் அமைப்பு
தமிழ்நாட்டில் அனல் மின்நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலை போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்த போதிலும் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு முழுமையாக நீங்கவில்லை. இப்போது பரவலாக மழை பெய்வதாலும், தென்மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதாலும் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கிறது. அதனால் மின்சார தட்டுப்பாடும் கணிசமாக குறைந்துள்ளது.
இருப்பினும், மின்சார தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்குவதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்டார். அதன்படி, புதிதாக கட்டப்படும் அரசு அலுவலக கட்டிடங்களில் கண்டிப்பாக சூரிய மேற்கூரை மின் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். பழைய அரசு அலுவலக கட்டிடங்களில் படிப்படியாக இந்த அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல ஊராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சோலார் பேனல் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு மானியம் ரூ.20 ஆயிரம்
வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்க மாநில அரசு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, வீடுகளில் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சோலார் பேனல் அமைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஒருவர் தனது சொந்த வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்–லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
ஆன்–லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் www.teda.in இ–பார்ம்ஸை கிளிக் செய்ய வேண்டும். அதில் டொமஸ்டிக் கிளிக் செய்தால் விண்ணப்ப படிவம் வந்துவிடும். அதில் கேட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு ஆன்–லைனிலேயே அனுப்பப்படும்.
இந்த இணையதளத்தில் சோலார் பேனல் விற்பனையில் ஈடுபட்டுள்ள கம்பெனிகளின் பட்டியலும் இடம்பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு கம்பெனியை வீட்டு உரிமையாளர் தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தில் தெரிவிக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகபட்சம் 1 கிலோ வாட் (1000 வாட் அவர்) திறன் கொண்ட சோலார் பேனலுக்கு மட்டுமே அரசு மானியம் கிடைக்கும்.
தினமும் 4 யூனிட் மின்சாரம்
ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் மூலம் தினமும் குறைந்தபட்சம் 4 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரத்தைக் கொண்டு ஒரு வீட்டில் 4 டியூப் லைட்டுகள், இரண்டு மின்விசிறிகள், ஒரு தொலைக்காட்சி பெட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம். மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருந்தால் சோலார் பேனல் மூலம் கிடைக்கும் மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரத்தை ‘கிரிட்’ மூலம் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் (பேட்டரி இல்லாமல்) அமைப்பதற்கு ரூ.1 லட்சம் செலவாகும். சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்துவைத்து இரவு நேரத்திலும் பயன்படுத்த விரும்பினால் அதற்கு பேட்டரியுடன் கூடிய சோலார் பேனல் வாங்குவதற்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும். சோலார் பேனலுக்கு 25 ஆண்டுகள் வாரண்டியும், ஒட்டுமொத்த சிஸ்டத்திற்கும் 5 ஆண்டுகள் வாரண்டியும் அளிக்கப்படுகிறது.
மத்திய அரசு மானியம் 30 சதவீதம்
பேட்டரியின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும். அதன்பிறகு ரூ.15 ஆயிரம் செலவு செய்து பேட்டரியை மாற்ற வேண்டியதுவரும். சோலார் பேனல் அமைக்கும்போது கம்பெனிக்கு மத்திய அரசின் 30 சதவீத மானியத் தொகையை கழித்துக் கொண்டு வீட்டு உரிமையாளர் கொடுத்தால், அந்த மானியத்தொகை கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்தபிறகு அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி பொறியாளர் ஆய்வு செய்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு தகவல் தெரிவிப்பார். அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் மானியத் தொகை வழங்கப்பட்டுவிடும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
கணிசமான பணம் மிச்சமாகும்
ஒருவர் ரூ.1 லட்சம் செலவு செய்து தனது வீட்டுக்கு பேட்டரி இல்லாமல் ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைத்தால் தற்போது மத்திய அரசு மானியமாக ரூ.30 ஆயிரம் கிடைக்கும். இத்துடன் தமிழக அரசு மானியமான ரூ.20 ஆயிரமும் கிடைத்தால், மொத்தம் ரூ.50 ஆயிரம் மானியமாக கிடைக்கும். மீதமுள்ள ரூ.50 ஆயிரம் செலவு செய்தால் ஒருவர் தனது வீட்டில் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்து கொள்ள முடியும். வீடுகளில் சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்தால் பொதுமக்களுக்கு கணிசமான பணம் மிச்சமாகும்.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
முறைகேட்டை தடுக்க ஆன்–லைனில் விண்ணப்பம்
முறைகேட்டை தடுப்பதற்காகவே ஆன்–லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்துள்ளோம். தற்போது மத்திய அரசின் மானியமான 30 சதவீதத்தைப் பெற்றுத் தருகிறோம். தமிழக அரசு மானியம் (ரூ.20 ஆயிரம்) உத்தரவு விரைவில் வெளியாக இருக்கிறது. அதன்பிறகு இரண்டு மானியத்தையும் சேர்த்தே பொதுமக்கள் பெறலாம். அடுக்குமாடி குடியிருப்புகளில் சோலார் பேனல் வைப்பதில் பிரச்சினை இருக்கிறது.
மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்துவிட்டால் மொட்டை மாடியை வேறு பயன்பாட்டிற்கு (துணி காயப்போடுதல், அப்பளம் காய வைத்தல்) பயன்படுத்துவது சிரமம். சூரிய சக்தி மின்சாரம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. அத்துடன், பெரும்பாலான பேர் கடைகள், ஓட்டல்களை வாடகை கட்டிடத்தில் நடத்துவதாலும், அதன் உரிமையாளர்கள் சோலார் பேனல் வைக்க அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.
சோலார் வாட்டர் ஹீட்டருக்கும்…
ஏற்கனவே சோலார் பேனல் வைத்தவர்களுக்கு தமிழக அரசின் மானியம் கிடைக்காது. அரசு உத்தரவுக்கு பிறகு சோலார் பேனல் அமைப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியம் கிடைக்கும். தமிழகத்தில் இதுவரை 1,500–க்கும் மேற்பட்டவர்கள் மத்திய அரசு மானியம் பெற்று சோலார் பேனல் அமைத்துள்ளனர். அதுபோல 1,700–க்கும் மேற்பட்டவர்கள் சூரிய சக்தி மின்சாரம் மூலம் சோலார் வாட்டர் ஹீட்டர் பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் சோலார் வாட்டர் ஹீட்டர் அதிகமானவர்கள் பெற்று இருக்கிறார்கள்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1