பொருளாதார கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழையுங்கள்-கலெக்டர் தரேஷ் அகமது வேண்டு கோள்.
பெரம்பலூர், ஜூன் 21:
பொருளாதார கணக்கெடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் உரிய தகவல்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கலெக்டர் தரேஷ் அகமது வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் தரேஷ் அகமது விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
பொருளாதாரக் கணக்கெடுப்பு என்பது பூகோள எல்லைக்குள் உள்ள எல்லாவித நிறுவனங்கள், நிறுவன வீடுகள் குறித்த முழுவதுமான எண்ணிக்கையை கணக்கிடுதல் ஆகும். பொருளாதாரத்தில் திட்டமிடுதல் நோக்கத்திற்காகவும் மற்றும் பொருளியலில் பல்வேறு துறைக் கூறுகளின் பங்களிப்பினை கணிப்பதற்காகவும் நடத்தப்படுகிறது.
இதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 6வது பொருளாதாரக் கணக்கெடுப்புப்பணி மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த 15.05.2013 முதல் வரும் 15.07.2013 வரையிலான காலத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பணியில் 369 கணக்கெடுப்பாளர்கள், 183 மேற்பார்வையாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இக்கணக்கெடுப்பில் மொத்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, கூலி மற்றும் ஊதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை, நிரந்தரக் கட்டமைப்புடன் கூடிய நிறுவனங்களின் எண்ணிக்கை, நிரந்தரக் கட்டமைப்பின்றி செயல்படும் நிறுவனங்கள் மற்றும் வீட்டிற்குள் நடைபெறும் தொழில்கள் குறித்த கேள்விகள் கேட்கப்பட உள்ளன. மேலும் ஊதியத்திற்கு பணிபுரியும் நபர்கள் மற்றும் ஊதியமின்றி பணிபுரியும் நபர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி குறித்தும், மாவட்டத்தின் வருவாய் நிலை குறித்தும் அறிந்து திட்டமிடுதலுக்கு இக்கணக்கெடுப்பு அவசியமாகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் கணக்கெடுப்பாளர்களால் சேகரிக்கப்படும் விவரங்களுக்கு தங்களைப் பற்றி உரிய தகவல்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும் கணக்கெடுப்பில் ஏதேனும் வீடுகளோ அல்லது நிறுவனங்களோ கணக்கெடுக்காமல் இருந்தால் புள்ளி இயல் துணை இயக்குநர், மாவட்ட புள்ளி இயல் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகம், (பழைய பேருந்து நிலையம் அருகில்), பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04328&276130, என்ற தொலை பேசி எண்ணிலோ அல்லது 94454&58136 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி


0 comments