+2 தேர்வு முடிவுகள் 9ம் தேதி சரியாக காலை 10 மணிக்கு V. களத்தூர் பள்ளி தகவல் பலகைகளில் ஒட்டப்படும்.
பெரம்பலூர், மே 6:
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 9ம் தேதி சரியாக காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளி தகவல் பலகைகளில் ஒட்ட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இணைய தளத்தில் டவுன் லோடு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்கி, 27ம் தேதி வரை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பிளஸ்2 பொதுத்தேர்வில் 58 பள்ளிகளை சேர்ந்த 4,089 மாணவர்கள், 3,811 மாணவிகள் என மொத்தம் 7,900 பேர் 23மையங்களில் தேர்வெழுதினர். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்கள் ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் திருத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் 9ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் தினசரி செய்தித்தாள்களின் மூலம் வெளியிட்டு வந்த நிலைமாறி, தகவல்தொழில் நுட்பமுன்னேற்றத்தால் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது அதனையும் எளிதாக்கி 9ம் தேதியன்று, அந்தந்த பள்ளிகளில் தேர்வுமுடிவுகளை தகவல் பலகையில் ஒட்டி தெரிவிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துவருகிறது. இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை பெரம்பலூர் வந்த பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் (என்எஸ்எஸ்) உஷாராணி பெரம்பலூர் அரசுமேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்டத்திலுள்ள 58 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களையும் அழைத்து பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்டஅளவில் மெயின் சென்டராக பெரம்பலூர் அரசு மேல்நி லைப்பள்ளியும், 10 நோடல்சென்டர்களாக புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ரோவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர், லெப்பைக்குடிகாடு (பெண்கள்), குன்னம் (ஆண்கள்), வெங்கலம், அம்மாப்பாளையம், பாடாலூர், அரும்பாவூர், V.களத்தூர் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள் அமைக்கப்பட்டது.
இதன்படி 9ம்தேதி காலை 7 மணிக்கு மெயின்சென்டரான பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து, நோடல் சென்டர் எனப்படும் 10 மையங்களுக்கு தேர்வு முடிவுகளை அனுப்பிவிடுவது எனவும், அவை 9.30 மணிக்குள்ளாக 58 மேல்நிலைப்பள்ளிகளுக்கும் பள்ளி வாரியாக சென்றடையும் விதமாக தேர்வு முடிவுகளை பிரித்துவழங்கவும், சரியாக 10 மணிக்கு மாவட்டத்திலுள்ள 58 பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சனிக்கிழமையும் பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கியிருந்த இணை இயக்குநர் உஷாராணி, 58 மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி வசதி இருப்பதை உறுதி செய்வதற்காக குறிப்பிட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அனைத்து கணினிகளிலும் தடையற்ற இணையதள வசதி ஏற்படுத்தவும் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் தகவல் பலகையில் தேர்வுமுடிவுகள் வெளியிடப்படும் அதேநேரம், இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வுமுடிவுகளையொட்டி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் உஷார் நிலையில் இருக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
Category: கல்வி

0 comments