பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.15.23 கோடியில் இருவழிச் சாலை பெரம்பலூர் கலெக்டர் நேரில் ஆய்வு!
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும், 15.23 கோடி மதிப்பிலான இருவழி சாலை பணியை, பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது ஆய்வு செய்தார்.
நெடுஞ்சாலைத்துறை மூலம் பணிகள் முடிக்கப்பட்ட, அகரம்சிகூர்- தாமரைப்பூண்டி வரையிலான மாவட்ட முக்கிய சாலையை பார்வையிட்ட கலெக்டர், இந்த சாலையில் அங்கனூர் கிராமத்தில், 4.60 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள பாலத்திற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின், அவர் தெரிவித்தாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை மூலம் வேப்பந்தட்டை முதல் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெய்குப்பை வரையிலான, 18.2 கி.மீ., நீளமுள்ள மாவட்ட முக்கிய சாலை, 23.27 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆத்தூர்- பெரம்பலூர் சாலையில், காமராஜர் வளைவில் இருந்து எளம்பலூர் செல்லும், 2.8 கி.மீ., நீளமுள்ள சாலை, 5.46 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. குன்னம்-வேப்பூர்-வயலப்பாடி சாலையில், 9.2 கி.மீ., நீளத்திற்கு, 18.06 கோடி மதிப்பில் சாலை மறுகட்டமைப்பு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.
துறையூர்- பெரம்பலூர் சாலையில், பாலக்கரை முதல், நான்கு ரோடு வரை, 1.60 கி.மீ., நீளத்திற்கு, 3.39 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆலத்தூர்- செட்டிகுளம் சாலையில், பொம்பனப்பாடி முதல் செஞ்சேரி வரை, 6.85 கி.மீ., நீளத்திற்கு சாலையானது, 13.73 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. செட்டிகுளம்- நக்கசேலம் வரை, 5 கி.மீ., நீளமுள்ள சாலை, 5.95 கோடி மதிப்பில் அகலப்படுத்தி பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முடியும் தருவாயில் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வுகளின் போது, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி கோட்ட பொறியாளர்கள் சுப்பிரமணியன், சேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments