லப்பைக்குடிக்காடு அடுத்த பென்னகோணத்தில் ரூ.2½ கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்!
பெரம்பலூர் மாவட்டம் பென்னகோணத்தில் ரூ.2½ கோடி மதிப்பில் புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இது குறித்து மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் வளர்மதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிதி ஒதுக்கீடு
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தபடி பெரம்பலூர் மாவட்டம் பென்னகோணம் துணை மின் நிலைய திட்டத்திற்கு ரூ.2 கோடியே 52 லட்சத்து 17 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக சுமார் 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த துணை மின்நிலையத்தில் உயர் அழுத்த மின்மாற்றி நிறுவப்பட்டுள்ளது. திருமாந்துறை, அத்தியூர், பெருமத்தூர், வடக்கலூர் மின்பாதைகள் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்பட உள்ளது.
சீரான மின்சாரம்
இந்த துணை மின் நிலையம் மூலம் லெப்பைக்குடிகாடு, பென்னகோணம், அத்தியூர், ரெட்டிகுடிகாடு, திருமாந்துறை, கழனிவாசல், வடக்கலூர், அகரம்சிகூர், எஸ்.ஆடுதுறை, பெருமத்தூர், சாத்தநத்தம் பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்கப்படுவதுடன், மங்களமேடு, கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் மின் பளு குறைக்கப்படும்.
மேலும் இந்த திட்டத்தால் ஒரு ஆண்டுக்கு 8.6 லட்சம் யூனிட் மின் இழப்பாவது தவிர்க்கப்படுவதால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ரூ.32 லட்சத்து 16 லட்சம் கூடுதல் வருவாய் கிடைக்க உள்ளது. இந்த திட்டத்தால் சுமார் 10 ஆயிரம் மின்நுகர்வோருக்கு தரமான மற்றும் சீரான மின்வினியோகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Category: மாவட்ட செய்தி

0 comments