லப்பைக்குடிகாடு பேரூராட்சி துணைத் தலைவரை கண்டித்து சாலை மறியல்!
பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு பேரூராட்சி துணைத் தலைவரை கண்டித்து, பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 15 உறுப்பினர்களும், தலைவராக சம்சூல் பஜ்ரியா, துணைத் தலைவராக அவரது கணவர் முஹம்மது பாருக் (ரஜினி பாருக்)உள்ளனர்.

கணவன், மனைவி தலைவர், துணைத் தலைவர் பதவியில் உள்ளதால், பேரூராட்சி அலுவலகத்திற்கு தலைவர் வருவதில்லை, துணைத் தலைவர் தன்னிச்சையாக செயல்படுகிறார், கூட்டத்தில் பேரூராட்சி பொருள் குறித்து எவ்வித விவாதங்களும் நடப்பது இல்லை, வருகை பதிவேடு, தீர்மான புத்தகம் ஆகியவற்றை துணைத் தலைவர் வீட்டிற்கு எடுத்து சென்று விடுகிறார். வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த செயல்பாடுகளை கண்டித்து துணைத் தலைவரை மாற்ற வேண்டும் எனக் கூறி, பேரூராட்சி உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். லப்பைக்குடிகாடு பேரூராட்சி அலவலக கூட்ட அரங்கில், திருச்சி பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மார்கிரேட் சுசீலா முன்னிலையில் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில், துணைத் தலைவரின் நடவடிக்கைகளை கண்டித்து பேசிய உறுப்பினர்கள் 2 பேரை, துணைத் தலைவர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினாராம். இதனால் ஆத்திரமடைந்த உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், பேரூராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியிலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மங்களமேடு துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


புகைப்படம் : லப்பைகுடிக்காடு நியூஸ்
Category: மாவட்ட செய்தி


0 comments