அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் முடிந்து குழந்தையுடன் தாய் வீட்டிற்கு திரும்ப 108 ஆம்புலன்ஸ்: புதிய சேவை அறிமுகம்.!
நகர்ப்புற மக்களுக்கு மட்டுமின்றி கிராமப்புற மக்களுக்கும் அடிப்படையான சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும். அதற்காக மருத்துவ துறையில் தரத்தை உயர்த்தி பாமர மக்களும் தரமான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு மருத்துவ திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் 104 மருத்துவ சேவை திட்டத்தை புதிதாக தொடங்கி வைத்தார். மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆலோசனைகள், நோய் குறித்த தகவல்கள், பெற விரும்புவோர் 104 எண்ணில் தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்படும்.
இந்த மருத்துவ தகவல் மையம் 24 மணி நேரமும் செயல்படும். தமிழகத்தின் எந்த ஒரு இடத்தில் இருந்தும் இந்த சேவையை பெறலாம்.
மேலும் பொதுமக்கள் மருத்துவ சேவை தொடர்பான புகாரையும் இந்த மையத்தில் தெரிவிக்கலாம். இந்த திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு வாரத்திற்குள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.
இந்த நிலையில் மேலும் ஒரு மருத்துவ சேவை தாய்மார்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் தாய்மார்கள் குழந்தை பெற்ற பிறகு நலமுடன் வீட்டிற்கு திரும்பி செல்ல 108 ஆம்புலன்ஸ் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று முதல்–அமைச்சர் அறிவித்தார்.
பிரசவத்திற்கு பிறகு தாயும், சேயும் பாதுகாப்பாக வீடு திரும்ப எந்த செலவும் இல்லாமல் வீட்டிற்கு செல்ல 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஏழை, எளிய குடும்பத்தினர் பெரும்பாலும் ஆட்டோக்களில்தான் பச்சிளம் குழந்தையை எடுத்து செல்வர். இது தாயுக்கும், சேயுக்கும் அசவுகாரியத்தை கொடுத்தது.
இனி 108–க்கு போன் செய்து தகவல் கொடுத்தால் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தை, தாய் வீட்டிற்கு இலவசமாக செல்லலாம். அவர்களுடன் கணவரோ அல்லது பெண்ணின் தாயோ ஒருவர் செல்லலாம்.
விபத்து மற்றும் உயிருக்கு போராடக்கூடிய நிலைகளில் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் இப்போது பிரசவம் முடிந்து வீட்டிற்கு செல்லவும் பயன்படுத்தப்படுகிறது.
Category: மாநில செய்தி


0 comments