பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை; நோயாளிகள் அவதி!
பெரம்பலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் 32 மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த 118 பணியாளர்கள்,39-க்கும் மேற்பட்ட சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன.
இதனால் நாள்தோறும் துறையூர், திட்டக்குடி, துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர், இங்கு புறநேயாளிகளாகச் சிகிச்சைக்கு வருகின்றனர்.
தரம் உயர்த்தப்பட்ட தலைமை மருத்துவமனை என்ற அறிவிப்பைத் தவிர, தேவையான மருத்துவர்களோ, கட்டட வசதிகளோ, நவீன சிகிச்சை வசதிகளோ இல்லை. ஒருசில பிரிவுகளைத் தவிர பல்வேறு சிகிச்சைகளுக்கு கடந்த பல மாதங்களாகவே மருத்துவர்கள் இல்லை. குறிப்பாக, ஹோமியோபதி பிரிவில் கடந்த 5 ஆண்டுகளாகவே மருத்துவரை நியமிக்கவில்லையாம்.
தமிழக அளவில், பச்சிளங் குழந்தைகளைப் பாதுகாப்பதில் இந்த மருத்துவமனை சிறப்பிடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இங்கு அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகள் போதுமான மகப்பேறு மயக்குநர்கள் இல்லாததால் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறதாம்.
அவசர சிகிச்சைப் பிரிவில் இரவு நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு பயிற்சி செவிலியர்களே முதலுதவி அளித்து, திருச்சிக்கோ அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கோ அனுப்பி வைக்கும் நிலை நீடிக்கிறது.
சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்குச் சிகிச்சையளிக்க 24 மணி நேரமும் எலும்பு முறிவு மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு, 5 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால், அவர்கள் முறையாக பணியில் இருப்பதில்லையாம்.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவோருக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுப்பதோடு, திருச்சி அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கும் அவர்கள் பரிந்துரைக்கப்படுகின்றனராம். இதுகுறித்து சம்பந்தப்பட்டோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கையும் இல்லையாம்.
இதுகுறித்து இங்கு சிசிச்சை பெறும் டெங்கு நோயாளியின் உறவினரான வழக்குரைஞர் என்.எஸ். இளங்கோவன் கூறியது:
இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 6 பேர் உள் நோயாளிகளாகச் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களின் அறைகளில் கொசுத் தொல்லையை அகற்றுதல் உள்ளிட்ட எந்தப் பாதுகாப்பையும் ஏற்படுத்தித் தரவில்லை. உரிய நேரத்தில் சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை. இதுபோன்ற அவலங்களைக் களைய வேண்டும் என்றார் அவர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும். மக்கள் தொகைக்கேற்ப, தலைமை மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமித்து, குறைகளைக் களைய மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.
Category: மாவட்ட செய்தி


0 comments