ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை ஹாஜி விமானத்தில் மரணம் !

ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை ஹாஜி அப்துல்லா மவுலானா விமானத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஹனீபாவின் மகன் அப்துல்லா மவுலானா (48). இவர் கடந்த 20 ஆண்டுகளாக திருவள்ளூர் ஜாமியா பள்ளி எனப்படும் பெரிய மசூதியில் இமாமாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை ஹாஜியாக நியமிக்கப்பட்டு தற்போது அப்பதவியில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 40 தினங்களுக்கு முன் திருவள்ளூரில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொண்டார்.
புதன்கிழமை இரவு சவுதி அரேபியா ஜித்தா விமான நிலையத்தில் விமானம் ஏறிய அப்துல்லா மவுலானா சென்னை விமான நிலையத்தில் விமானம் நின்றவுடன் தனது கைப் பையை எடுத்துக் கொண்டு விமானத்தில் 10 அடி தூரம் நடந்திருப்பார்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தார். இதையடுத்து விமான நிலைய மருத்துவர்கள் அவரை பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்.
இதையடுத்து விமான நிலைய சம்பிரதாயங்கள் முடிந்து மாலை திருவள்ளூர் ஜாமியா மசூதிக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு ஒரு மணி நேரம் மக்களின் பார்வைக்கு வைத்தப் பின்னர் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு அனுப்பப்பட்டது.
அவரது உடல் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்குப் பின்னர் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மசூதியில் அடக்கம் செய்யப்படும் என தெரிவித்தனர். இறந்த அப்துல்லாமவுலானாவுக்கு ஒரு மகன் 3 மகள்கள் உள்ளனர்.
தகவல் முதுவைஹிதாயத்
Category: சமுதாய செய்தி
0 comments