இந்த ஆண்டு இறுதிக்குள் பிளாஸ்டிக் கரன்சி நோட்டு: ரிசர்வ் வங்கி இயக்குநர் தகவல்!
மானாமதுரை: நடப்பாண்டு இறுதிக்குள் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுக்கள் புழக்கத்துக்கு வரும் என ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல இயக்குநர் சதக்கத்துல்லா தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம் பாண்டியன் கிராம வங்கியில் தானியங்கி நாணயம் வழங்கும் இயந்திரத்தின் துவக்க விழா நடந்தது. விழாவில் நாணயம் வழங்கும் இயந்திரத்தை துவக்கி வைத்து ரிசர்வ் வங்கி மண்டல மேலாளர் சதக்கத்துல்லா பேசியதாவது: நொய்டா, அலிப்பூர், மும்பை ஆகிய இடங்களில் நாணயங்கள் தயாரிக்கப்பட்டு ரிசர்வ் வங்கி மூலம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு வழங்கப்படுகிறது. எந்த பொருட்கள் வாங்குவதாக இருந்தாலும் ரூபாய் நோட்டுகளை எடுத்து சில்லரையாக மாற்றுகிறோம். அவ்வாறு வீடுகளில் தேங்கும் நாணயங்களை மீண்டும் பயன்படுத்தாமல் பழையபடி நோட்டுகளை எடுத்து பொருட்கள் வாங்குகிறோம்.
இதனால் நாணயப் புழக்கம் குறைந்து போய் ஒரே இடத்தில் மொத்தமாக தேங்குகிறது. இதனால் நாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த தட்டுப்பாடை குறைக்க நாணயம் வழங்கும் இயந்திரங்களை தமிழகத்தில் 300 இடங்களில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நிறுவி வருகிறோம். அதில் ஒன்றாக ராஜகம்பீரம் பாண்டியன் கிராம வங்கி கிளையில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் மைசூர், சிம்லா உள்ளிட்ட 5 நகரங்களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக், மத்திய பிரதேசத்தில் உள்ள திவாஸ், கர்நாடகாவில் உள்ள மைசூர், கொல்கத்தா அருகில் உள்ள சல்போனி ஆகிய 4 இடங்களில் கரன்சி நோட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள் ஒரே மாதிரியாக இருப்பது உண்மைதான். ஆனால் அது குறித்து பெரிதாக புகார்கள் வரவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
Category: மாநில செய்தி
0 comments