எறையூர் சர்க்கரை ஆலையில் இணை மின்னுற்பத்தி திட்டம் நிறைவேறுவது எப்போது?
பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் அருகில் எறையூர் சர்க்கரை ஆலையின் இணை மின்னுற்பத்தி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்க்கரை ஆலையில் நாள் ஒன்றுக்கு 1,500 டன் கரும்பு அரவை செய்யப்பட்டு, பின்னர் 3 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது.
தரமற்ற இயந்திரங்களால் நாளுக்கு நாள் அரவைத் திறன் குறைந்து, ஆலை நஷ்டத்தில் இயங்க தொடங்கியது. இதனால், இந்த ஆலையை தனியாரிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டது.
தற்போது ரூ. 42 கோடி மதிப்பீட்டில் ஆலையை நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சர்க்கரை ஆலையின் மின் தேவையை சுயமாக பூர்த்தி செய்து கொள்ளவும், ஆலையின் நஷ்டத்தை குறைக்கவும் இணை மின்னுற்பத்தியை தொடங்க கடந்த 2010-ல் திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்துக்காக ரூ. 96 கோடியில் 18 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
சர்க்கரை ஆலையில் இப்போதுள்ள பழைய தொழில்நுட்பத்தின்படி ஒரு டன் கரும்பை அரைப்பதால் கிடைக்கும் சக்கையிலிருந்து 35 யூனிட் மின்சாரம் மட்டுமே தயாரிக்க முடிகிறது. ஆனால், இணை மின்னுற்பத்தி திட்டத்தால் 125 யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும்.
இதன்மூலம் உபரி மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ. 4 வீதம் மின்சார வாரியத்துக்கு விற்று ஆலைக்கு கூடுதல் வருமானம் ஈட்ட முடியும்.
இந்த இணை மின்னுற்பத்தி திட்டத்தை செயல்படுத்தும் பணி தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 சதவீத கட்டுமானப் பணிகளே முடிவடைந்துள்ள நிலையில் மின்னுற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள் அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டு, அவை ஆலை வளாகத்திலேயே வைக்கப்பட்டுள்ளன.
கடுமையான வறட்சியால் கரும்பு சாகுபடிக்கான பரப்பளவு குறைந்து வருகிறது. வறட்சியை சமாளிக்க கிணறுகளை ஆழப்படுத்தவோ, ஆழ்குழாய் கிணறுகளை அமைத்திடவோ, வங்கிக் கடன் தராததால் விவசாயிகள் பாதிப்பு, அறுவடை செய்து அனுப்பிய கரும்புக்கு சரியான நேரத்தில் பணப்பட்டுவாடா செய்யாமல் விவசாயிகளை இழுத்தடித்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆலை நஷ்டத்தில் இயங்கும் நிலையே மீண்டும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் கூறியது:
எறையூர் ஆலையில் தொடங்கப்பட்ட இணை மின்னுற்பத்தி திட்டம் 18 மாதங்களில் முடிக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், 48 மாதங்களாகியும் திட்டம் நிறைவடையவில்லை. மின் பற்றாக்குறை உள்ள நிலையில் இத்திட்டம் நிறைவடைந்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் பயனடைவார்கள்.
ஆலையை நவீனப்படுத்தும் பணிகள் நிறைவடையாததால் ஆண்டுதோறும் நவம்பரில் தொடங்கப்படும் அரவைப் பருவம், நிகழாண்டு நவம்பரில் தொடங்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.
எனவே, எறையூர் சர்க்கரை ஆலையில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் இணை மின்னுற்பத்தி திட்டத்தை விரைந்து செயல்படுத்த மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே கரும்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
Category: மாவட்ட செய்தி
0 comments