சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட 2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!
சென்னை, அக்.14:
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பயணிகள் வருகை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் குப்பை தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் 2 பேர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சுங்க அலுவலகம் அருகே இருந்த குப்பைத்தொட்டிக்குள் கருப்பு கலர் காகிதத்தில் சுற்றப்பட்ட 4 பார்சல்கள் இருந்ததை கண்டனர்.
இதனையடுத்து, ஊழியர்களுக்கு அதில் ஏதாவது மர்ம பொருள் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. எனவே சுத்தப்படுத்தும் பணியை பாதியில் நிறுத்திவிட்டு விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். விமான நிலைய மேலாளர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். உடனே வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து மோப்ப நாய் உதவியுடன் அந்த பார்சல்களை சோதனையிட்டனர். ஆனால் அதில் குண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது. அதன்பின், அந்த பார்சல்களை பிரித்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதில் அரை கிலோ எடை கொண்ட தங்க கட்டி வீதம் 4 பார்சல்களிலும் 2 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் இருந்ததை கண்டனர். இவற்றின் சர்வதேச மதிப்பு
^60
லட்சம். அதனை எடுத்த விமான நிலைய அதிகாரிகள் சுங்கத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தங்க கட்டிகளை கைப்பற்றினர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் சிங்கப்பூர் அல்லது துபாய் நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் இந்த தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டிருக்கலாம். சுங்க சோதனை தீவிரமாக இருந்ததால் அதிகாரிகளுக்கு பயந்து தங்க கட்டிகளை எடுத்து வந்து குப்பைத்தொட்டியில் மறைத்து வைத்து கடத்தல் ஆசாமிகள் தப்பி சென்றிருக்கலாம் என தெரியவந்தது.
குப்பைத்தொட்டியில் மறைத்து வைத்த ஆசாமிகள், பயணிகள் அனைவரும் வெளியில் சென்றதும் அதிகாரிகள் சோதனை முடிந்த பிறகு தங்களது பொருளை தவறவிட்டதாக கூறி, மீண்டும் உள்ளே நுழைந்து தங்கள் பார்சலை எடுக்க முயன்றிருக்கலாம் எனவும் தெரிந்தது.
எனவே தங்க கட்டிகளை குப்பைத்தொட்டியில் போட்ட மர்ம ஆசாமி யார் என்பதை கண்டுபிடிக்க, விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராக்களில் பதிவாகியுள்ள ஒளிநாடாக்களை போட்டு பார்த்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால் அதில் ஆசாமியின் முகம் சரியாக பதிவாகவில்லை.
எனவே, கடத்தல் ஆசாமி நேரடியாக தங்கத்தை போட்டு சென்றாரா அல்லது அவருக்கு வேறு யாராவது துணை செய்தனரா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சந்தேகப்பட்ட பலரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை யாரும் பிடிபடவில்லை. இச்சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Category: மாநில செய்தி
0 comments