.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மக்கள் தொகை அதிகரிப்பு: ந(ர)கர வாழ்க்கையில் சென்னை மக்கள்!

Unknown | 2:36 PM | 0 comments







சென்னை மக்களின் நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறி வருகிறது.

சென்னை என்றாலே கிராமத்திலுள்ளவர்களுக்கு ஒரு வியப்பு. விண்ணை தொடும் வகையில் கண்ணாடி மாளிகைகள், சாலையில் விலை உயர்ந்த கார்கள், ஆடம்பரமான வாழ்க்கை என்று நினைக்கின்றனர். அனைத்தும் கிடைக்கும் சொக்கபுரியாகவே பலர் சென்னையை கற்பனை செய்து கொள்கின்றனர். ஆனால் சென்னையின் மறுபக்கம் பலருக்குத் தெரிவதில்லை.

சென்னை நகருக்குள் வரும்போதே கூவம் ஆற்றின் துர்நாற்றம் புதிதாக வருபவர்களுக்கு ஒரு குமட்டலை ஏற்படுத்தும். அதை பொருட்படுத்திக் கொண்டு சென்னைக்குள் வருவதற்குள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகி விடுகின்றனர். இருப்பினும் சொந்த ஊரில் வேலை வாய்ப்பு இல்லாததால், பிழைப்புத் தேடி சென்னைக்கு தினமும் பலர் படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னை மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன்காரணமாக சென்னை நகர எல்லை விரிவடைந்து வருகிறது. விவசாய நிலங்கள் விற்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவருகின்றன. சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய வாழ்க்கை நடைமுறையை வாழ, சென்னை மக்கள் பழகிக் கொண்டுள்ளனர். வீடுகளில் இருக்கும் நேரத்தை விட ரயில்களிலும், பஸ்களிலும், அலுவலகங்களிலும் நேரத்தை செலவழிப்பதே அதிகமாகி இருக்கிறது.



இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடி. இதில் ஆண்கள் 62 கோடியே 37 லட்சமும், பெண்கள் 58 கோடியே 65 லட்சமுமாகும். இந்தியாவில் நான்கு பெருநகரங்களில் மும்பையில் 2,19,00,967 பேரும், டெல்லியில் 1,89,16,890 பேரும், கொல்கத்தாவில் 1,56,44,040 பேரும், சென்னையில் (தமிழகத்தில்) 7,21,38,958 பேரும் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2001ஆம் ஆண்டை ஒப்பிடும் போது பத்து ஆண்டுகளில் 18 கோடி மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்தாலும், அதன் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. மருத்துவ வசதி காரணமாக இறப்பு சதவிகிதம் குறைந்துள்ளது. 2014ல் இந்தியாவின் மக்கள் தொகை 1.27 கோடி என்று ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

மக்கள் தொகை எண்ணிக்கையில் 7வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் மக்கள் தொகை எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் ஜெட் வேகத்தில் அதிகரித்திருக்கிறது. சென்னையில் 1951ல் 14,16,056 பேரும், 1961ல் 17,29,141 பேரும், 1971ல் 24,69,449 பேரும், 1981ல் 32,66,034 பேரும், 1991ல் 38,41,398 பேரும், 2001ல் 43,43,645 பேரும், 2011ல் 46,81,087 பேரும் உள்ளனர். 2012ல் 47,17,599 பேரும், 2013ல் 47,54,499 பேரும், 2014ல் 47,92,949 பேரும் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் அடிப்படை தேவைகளுக்கு கூட மக்கள் அல்லல்படும் நிலை உருவாகி இருக்கிறது.



சென்னை நகரில் ஒரு சதுர கி.மீட்டரில் 24,418 பேர் வசிக்கின்றனர். நெருக்கடியான சூழ்நிலையில் மக்கள் குடியிருப்பதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைப்பதில்லை. குறிப்பாக சுகாதாரமான குடிநீர், காற்று, கழிவறைகள் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.

தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் வேறுமாநிலங்களிலிருந்தும் வேலை தேடி சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. இவர்கள் சென்னையில் கட்டுமானப் பணிகள், ஓட்டல் வேலை, காவலாளிகள் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு சொற்ப தொகையே ஊதியமாக வழங்கப்படுகிறது. இதனால் வாடகை வீடுகளில் குடியிருக்க வழியில்லாமல் பிளாட்பாரங்களிலும், மெரீனா கடற்கரையிலும் தங்கி காலத்தை கடத்துகின்றனர்.

நடுத்தர வர்க்கத்திலுள்ளவர்கள் தேனீக்களைப் போல அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருக்கின்றனர். சுகாதார சீர்கேட்டின் பிறப்பிடமான வடசென்னையில், பத்துக்கு பத்து ரூமில்தான் பலர் முடங்கி கிடக்கிறார்கள். இன்னும் சிலர் கூவம் கரையோரத்திலும், ரயில் தண்டவாளத்தையொட்டியும் தங்கியிருக்கின்றனர்.

நகரப்பகுதிகளில் வீட்டு வாடகை அதிகம் என்பதால் சென்னையிலிருந்து 100 கி.மீட்டர் தூரத்திலிருக்கும் பகுதிகளிலிருந்து தினமும் வேலை, கல்விக்காக வந்து செல்பவர்களும் உண்டு. இதனால் சென்னை மின்சார புறநகர் ரயில்களிலும், அரசு பஸ்களிலும் காலை, மாலை, இரவு நேரங்களில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதுகின்றன.

இதன்காரணமாக சிக்னலுக்காக மக்கள் பல மணி நேரம் காத்திருந்து நேரத்தை விரயமாக்க வேண்டியதுள்ளது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மேம்பாலங்கள் என எத்தனையோ முயற்சிகளை அரசு மேற்கொண்டாலும், அதற்கு நிரந்தர தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. இதனால் தினந்தோறும் நகரத்தின் வாழ்க்கையை நரக வேதனையோடு கடந்து வருகின்றனர்.

சென்னையைப் போல பிற மாவட்டங்களும் தொழில், கல்வி போன்றவற்றில் வளர்ச்சியடைந்தால் மட்டுமே இதற்கு தீர்வு காணமுடியும்.

- எஸ்.மகேஷ்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1