மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஓராண்டு சிறை: மத்திய அரசு திட்டம்!
புதுடெல்லி: மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட புதிய சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வரைவு மசோதா, மக்களின் கருத்துகளை கேட்டறிவதற்காக வெளியிடப்பட்டது.
ஒரு நபர், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றத்தை முதல் முறையாகச் செய்தால், அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 மாதங்களுக்கு குறையாமல் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக வழங்குவதுடன், 6 மாத காலம் வரை ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
அதே குற்றத்தை அடுத்த 3 ஆண்டுகளில் அந்த நபர், இரண்டாவது முறையாக செய்தால், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனையோ அல்லது 2 தண்டனைகளுடன் சேர்த்து ஓராண்டு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
குழந்தை இறப்புக்கு காரணமாகும் விபத்துகளை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு 3 லட்சம் ரூபாய் அபராதத்துடன், 7 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனையும் விதிக்கப்படும். மது அருந்தி பள்ளி வாகனங்களை ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டால், 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்.
சாலையில் இருக்கும் சிக்னலை 3 முறை மீறுவோருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு மாத காலத்துக்கு ஓட்டுநர் உரிமம் ரத்தும் செய்யப்படும். இந்த மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Category: மாநில செய்தி
0 comments