.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஐந்து வேளை நீங்கள் தொழுவதால் என்ன நன்மை?

Unknown | 3:44 PM | 0 comments




29-08-2014 அன்று இஸ்லாம் பற்றிய அறிமுக நிகழ்ச்சி பதியா அழைப்பு வழி காட்டல் மையம் சார்பாக ரியாத் பத்ஹாவில் நடந்தேறியது.. அந்த விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். இந்து நண்பர்கள் பலரையும் இந்த விழாவுக்கு அழைத்திருந்தனர். விழாவின் முடிவில் இந்து நண்பர்களை இஸ்லாத்தின் மேல் உள்ள உங்களின் விமரிசனங்களை தாராளமாக வைக்கலாம் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த விழாவில் பல மாற்று மத நண்பர்கள் தங்கள் கேள்விகளை வைத்தனர். ராம் கவாஸ்கர், கணேசன், செல்வகுமார், பாலாஜி, சிவா, சேகர், சித்ர வேலு, மருத்துவர் சிவகுமார் என்று பலரும் விழாவுக்கு வருகை தந்து தங்கள் ஐயங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் ஒரு கேள்வியை ராம் கவாஸ்கர் வைத்தார்.

ராம் கவாஸ்கர்: ஐந்து வேளை இஸ்லாத்தில் கட்டாய கடமை என்று சொல்லப்படுவது ஏன்? இதனால் கடவுளுக்கு என்ன நன்மை?

பொறியாளர் ஜக்கரியா: 'இறைவன் குர்ஆனில் ஐந்து வேளை தொழுக சொல்லி கட்டளையிடுகிறான். அதுதான் முக்கிய காரணம். உடற் பயிற்சி, ஆன்மீக பயிற்சி என்று அதற்கு பல விளக்கங்கள் இருந்தாலும் இறைவன் கூறியதால் உலக முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழுகையை கட்டாயமாக கடை பிடிக்கின்றனர்.' என்று கூறி நேரமின்மை காரணமாக சுருக்கமாக முடித்துக் கொண்டார். ஆனால் நமக்கு நேரம் இருப்பதால் அந்த தொழுகையில் என்னனென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை சற்று விரிவாக பார்ப்போம்.

பள்ளி வாசலில் தொழச் செல்பவர் தனக்கு முன்னால் யாரும் அமர்ந்திருந்தால் அவரை நகர்த்தி விட்டோ அல்லது அவருக்கு சிரமத்தை தரும் பொருட்டோ அமரக் கூடாது. கூட்டுத் தொழுகையில் நிற்கக் கூடிய ஒருவர் அருகில் உள்ளவரோடு விலகி நிற்கக் கூடாது. அவருடைய தோளும், நமது தோளும் ஒன்றோடு ஒன்று உரசும் வகையில் நிற்க வேண்டும். யாரும் கூச்சப்பட்டுக் கொண்டு விலகி நின்றால் அவரை தனது கையால் இழுத்து தனது அருகில் நிறுத்திக் கொண்டே தொழ வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் கட்டளை. கூட்டுத் தொழுகையில் அவ்வாறு இடைவெளி விட்டு நின்றால் உங்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்ற நபி மொழியையும் நாம் பார்க்கிறோம்.

நான் தினமும் தொழச் செல்லும் பள்ளிக்கு தெருக்களைக் கூட்டி சுத்தம் செய்யக் கூடிய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்து சகோதரர்கள் இருவர் தொடர்ந்து பள்ளிக்கு வருவர். நம் ஊரில் இவர்களை 'தோட்டி' என்று இளக்காரமாக பார்த்து அதற்கென்று ஒரு சாதியையும் ஏற்படுத்தி வைத்துள்ளோம். இங்கு சவுதியில் அந்த பங்களாதேஷத்தவர் தெருவை கூட்டிக் கொண்டே அவர்களின் மஞ்சள் கலரான சீருடையிலேயே பள்ளிக்கு தொழ வருவர். வெயிலில் எந்த நேரமும் வேலை செய்வதால் அவர்கள் உடையிலிருந்து ஒரு வித வியர்வை வாசனையும் வரும். இதனால் சங்கோஜப்பட்டுக் கொண்டு அந்த பங்களாதேசத்து சகோததரர்கள் பக்கத்தில் நிற்பவர்களிடமிருந்து சற்று இடைவெளி விட்டு நிற்பர்.

இவர்களுக்கு அருகில் பெரும் கோடீஸ்வரர்களும், உலகின் மிக உயர்ந்த ஆடைகளையும் வாசனை திரவியங்களையும் பூசிக் கொண்டு நிற்பவர்களுமான சவுதிகளை நாம் பார்போம். அந்த பங்களாதேசத்தவர் விலகி நிற்பதை கண்டு தங்கள் கைகளால் அவர்கள் சட்டையை பிடித்து இழுத்து தங்கள் அருகில் நிறுத்திக் கொள்வதை நான் தினமும் பார்க்கிறேன். ஒருகால் மனதால் இந்த செய்கையை சவுதிகள் வெறுத்தாலும் தங்கள் தொழுகை வீணாகி விடக் கூடாது. இதனால் இறைவனின் கோபத்திற்கு நாம் ஆளாகி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையால் தனதருகில் இழுத்து நிறுத்திக் கொள்கிறார். தான் ஒரு அரபி: தான் ஒரு கோடீஸ்வரன்: தான் ஒரு சவுதி போன்ற நினைப்பெல்லாம் மசூதிக்கு வெளியேதான். இறைவனின் ஆலயத்துக்குள் வந்து விட்டால் ஆண்டியும் அரசனும் ஒன்றுதான் என்பதை நிலை நிறுத்தவே தொழுகையில் இது போன்ற கட்டளைகள் நபிகள் நாயகத்தால் இடப்படுகின்றது. உலக அளவில் தீண்டாமை இஸ்லாமியரிடத்தில் முழு அளவில் ஒழிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே இந்த ஐவேளை தொழுகைதான் என்றால் மிகையாகாது.

அடுத்து வீட்டிலேயே அடைந்து கிடக்காமல் ஒரு நாளுக்கு ஐந்து வேளை பள்ளிக்கு தொழுக வந்து அனைத்து மக்களோடும் அன்பாக பேசி சலாம் சொல்லி செல்வதால் மனதுக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது. நமது கஷ்டங்களை எல்லாம் இறைவன் முன்னால் தலையை கீழே வைத்து அனைத்து பாரங்களையும் இறக்கி வைத்து விடுகிறோம். இதனால்தான் தமிழகத்திலும், இந்தியாவிலும், ஏன் உலகம் முழுவதிலும் தற்கொலை விகிதத்தில் மற்றவர்களை விட முஸ்லிம்கள் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணமே .இந்த தொழுகைதான்.

மேலும் இறைவன் குர்ஆனில் 'உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதால் எந்த பலனும் இல்லை.: மாறாக உங்களின் இறை அச்சமே இறைவனால் பொருந்திக் கொள்ளப்படும்' என்ற பொருள்பட கூறுகிறான். இதன் மூலம் ஒரு மனிதன் தொழுவதால் இறைவனின் அந்தஸ்து உயரப் போவதில்லை. இது போன்ற தேவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் நம்மை படைத்த இறைவன். இந்த தொழுகையானது மனிதனுக்குள் மறைந்துள்ள 'தான்' என்ற அகம்பாவத்தை வீழ்த்தி அவனை ஒரு சராசரி மனிதனாக மாற்றுகிறது என்றால் மிகையில்லை. எனவே இந்த தொழுகைகள் மூலம் மனிதன்தான் பலன் அடைகிறான். அதனை இறை கட்டளையாக செய்வதால் அந்த மனிதன் இரு பலன்களை பெறுகிறான். ஒன்று தனது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுகிறான். மற்றொன்று தன்னை சராசரி மனிதனாகவும் மாற்றிக் கொள்கிறான். இதுதான் இந்த தொழுகையின் மூலம் நாம் பெறும் படிப்பினையாகும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1