சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 13 கிலோ தங்கம் சிக்கியது கடத்தலுக்கு உதவிய 2 அதிகாரிகளும் பிடிபட்டனர்!
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 13லு கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்தவருக்கு உதவிய 2 குடியுரிமை அதிகாரிகளை பிடித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தங்கம் கடத்தல்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். ஆனால் யாரும் சிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மத்திய வருவாய் அதிகாரிகள், விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போட்டுப்பார்த்தனர்.
குடியுரிமை அதிகாரிகள் சிக்கினர்
அப்போது நேற்று முன்தினம் இரவு ஒரு பயணி, குடியுரிமை பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்புகிறார். அவரிடம் 2 குடியுரிமை அதிகாரிகள் ரகசியமாக ஏதோ பேசுவதை கண்டுபிடித்தனர். உடனே மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குடியுரிமை பகுதியில் உள்ள கழிவறைக்குச் சென்று ஆய்வு செய்தபோது அங்கு ஒரு கைப்பை இருந்தது.
அதில் 3லு கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். உடனே குடியுரிமை அதிகாரிகளான பால்ராஜ், சவுந்திரராஜன் ஆகியோரை தனியாக அழைத்துச் விசாரித்தனர்.
அப்போது அவர்கள், “எங்களுக்கு எதுவும் தெரியாது” என்றனர். இதையடுத்து அவர்களிடம் கேமராவில் பதிவான காட்சிகளை போட்டு காண்பித்தனர். அதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாக்லெட் பார்சல்
இதேபோல் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது சித்திக் (வயது 40) என்பவர் வந்தார். அவர் மீது சந்தேகம் கொண்ட மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
அவரது சூட்கேசில் குழந்தைகளுக்கான சாக்லெட் பார்சல்கள் இருந்தன. அவற்றில் 10 சாக்லெட் பார்சல்களை பிரித்து பார்த்தபோது அதில் சாக்லெட்டிற்கு பதிலாக தங்க துண்டுகளை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். ரூ.1லு கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது சித்திக்கை கைது செய்தனர்.
பெண் கைது
மேலும் நேற்று காலை பக்ரைனில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கி வந்த ஆந்திராவைச் சேர்ந்த கோமதி என்ற விஜயலதா (40) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து இருந்த தங்க கட்டிகளை கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்த சூட்கேசிலும் துணிகளுக்கு நடுவே தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. அவரிடம் இருந்து ரூ.1லு கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் விஜயலதாவை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
13 கிலோ தங்கம்
சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 13லு கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், சுங்க இலாகா அதிகாரிகளும் கைப்பற்றினர்.
கடந்த மாதம் சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தல் ஆசாமியுடன் குடியுரிமை அதிகாரி ஒருவர் வந்தபோது அவரை சுங்க இலாகா அதிகாரிகள் பிடித்தனர். ஆனால் அவர் தனக்கு எதுவும் தொடர்பில்லை என கூறியதால் அவரை விட்டு விட்டனர். இதையடுத்து அந்த அதிகாரி, குடியுரிமையில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். தற்போது 2 குடியுரிமை அதிகாரிகள் தங்கம் கடத்தலுக்கு உதவியாக இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர். போலீசார்தான் குடியுரிமை பிரிவு பணிக்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடத்தலுக்கு குடியுரிமை பிரிவு அதிகாரிகள் உடந்தையாக இருந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தல் சம்பவங்கள் குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், சுங்க இலாகா அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Category: மாநில செய்தி
0 comments