பெரம்பலூர் அருகே டேங்கர் லாரி மீது வேன் மோதல்; தொழிலாளி சாவு 12 பேர் காயம்!
பெரம்பலூர் அருகே எரிவாயு ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி மீது வேன் மோதியதில் தொழிலாளி இறந்தார். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
லாரி மீது வேன் மோதல்
விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 45). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். காளிராஜ் உள்பட 13 பேர் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் நேற்று முன்தினம் கலந்து கொண்டுவிட்டு, விருதுநகருக்கு வேனில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். வேனை, விருதுநகரை சேர்ந்த சிவக்குமார்(45) ஓட்டி வந்தார்.
அந்த வேன் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூர் அருகே நள்ளிரவில் வந்தபோது, முன்னால் எரிவாயு ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியின் மீது வேன் மோதியது. இதில் வேனின் புட்போர்டில் படுத்திருந்த காளிராஜ் (45), மாரியப்பன் (60), சுதாகரன் (34), டிரைவர் சிவக்குமார், பிரபு, மணிகண்டன், கார்த்திக், சதீஷ், ராமச்சந்திரன், உமாராணி உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
தொழிலாளி சாவு
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காளிராஜ் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சுதாகரன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.




Category: மாவட்ட செய்தி
0 comments