பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கிகள் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தல்!
பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கியில் கணக்கு இல்லாதோரை கண்டறிய, வங்கியாளர்கள் சிறப்பு முகாம்கள் நடத்திட வேண்டும் என்று ஆட்சியர் தரேஸ் அஹமது கூறினார்.
ஆட்சியரகத்தில் பிரதமரின் மக்கள் நிதி (ஜன்தன்) திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கிய பயனாளிகளுக்கு ரூபே எனப்படும் ஏடிஎம் கார்டு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பயனாளிகளுக்கு ஏடிஎம் அட்டை வழங்கி ஆட்சியர் மேலும் பேசியது: பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,49,401 குடும்பங்கள் உள்ளன. இங்கு, கூட்டுறவு வங்கிகள் உள்பட 71 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து குடும்பத்தினருக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
இதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் 80 சத குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வங்கிக் கணக்கு உள்ளது. எஞ்சிய 20 சத குடும்பத்தினருக்கும் வங்கி கணக்கு தொடங்க மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கியாளர்களும் சிறப்பு முகாம்கள் நடத்தி, வங்கி கணக்கு இல்லாத குடும்பங்களை கண்டறிந்து அவர்களும் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வங்கி கணக்குகள் தொடங்குவதால், அரசின் திட்ட நிதியுதவிகளை எளிதில் பெறலாம். மேலும், வங்கி கணக்கு தொடங்க குறைந்தபட்ச தொகை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கி கணக்கு இல்லாத குடும்பங்களை சேர்ந்தோர், உடனடியாக அருகில் உள்ள வங்கிகளுக்கு சென்று கணக்கு தொடங்கி பயன்பெற வேண்டும் என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது.
நிகழ்ச்சியில், இந்தியன் ஓவர்சிஸ் வங்கி பொதுமேலாளர் ராணா (சென்னை), நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் கோதண்டபாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ. அய்யம்பெருமாள், கனரா வங்கி உதவி பொது மேலாளர் ராமசாமி, முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன் உள்பட வங்கியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments