சர்க்கரை நோய் குறித்து ஆயுர்வேத மருத்துவம்!
சர்க்கரை நோய் குறித்து ஆயுர்வேத மருத்துவர் கூறுகையில், “மெள்ள மெள்ள உயிரைக் குடிக்கும் சர்க்கரை நோயை, ஆயுர்வேதத்தில் ‘பிரமேகம்’ என்று சொல்வோம். நோயின் மூலக்காரணம், நோயின் விளைவு, நோயல் ஏற்படும் உடல் மற்றும் செயலில் மாறுபாடுகளை அடிப்படையாகக்கொண்டு இந்த நோயை 20 வகைகளாகப் பிரிக்கலாம். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உடல் உழைப்பை அதிகரித்தல் மூலம் சர்க்கரை நோயாளிகளும் மற்றவர்களைப் போல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ முடியும். உணவில் கறிவேப்பிலை, மஞ்சள், கொத்துமல்லி, பூண்டு, சீரகம், கருஞ்சீரகம், வெந்தயம் போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்றவர், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் சில உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டார். இவற்றை டாக்டர்களின் ஆலோசனையின்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்புடன் கூறுகிறார்.
நாவல் ;
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் முக்கிய மூலிகை, நாவல். நாவல் மரத்தின் இலை, பழம், விதை என ஒவ்வொரு பகுதியும் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவியாக உள்ளது. நாவல் பழம் எப்போதெல்லாம் கிடைக்கிறதோ, அதை உங்கள் உணவில் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ளுங்கள். இந்தப் பழமானது கணையத்துக்கு மிகவும் நல்லது. பழத்தின் விதையை காயவைத்து பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியை தினமும் இரண்டு வேளை தண்ணீரில் கலந்து குடித்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
பாகற்காய் ;
தினமும் பாகற்காய் சாற்றை வெறும் வயிற்றில் குடிப்பதும், வாரத்துக்கு இரண்டு-மூன்று நாட்களுக்கு பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்வதும் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். பாகற்காயின் விதையை நீக்கிவிட்டு, அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி அப்படியே குடிக்க வேண்டும்.
வெந்தயம் ;
சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் மற்றோர் உணவுப் பொருள் வெந்தயம். முந்தைய நாள் இரவில் ஒரு டம்ளர் நீரில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தைப்போட்டு ஊறவிட வேண்டும். அடுத்த நாள் காலையில், இந்த வெந்தயம் மற்றும் தண்ணீரை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து இதைச் செய்துவந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு தானாக குறையும். இதனுடன் பாலில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு வெந்தயப் பொடியைச் சேர்த்து பருகுவதும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
கொய்யா ;
இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச் சத்தானது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இருப்பினும், கொய்யாவைத் தோலுடன் சேர்த்து சாப்பிடும்போது அது சர்க்கரை அளவை அதிகரித்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, தோலை நீக்கிவிட்டு சாப்பிடலாம். அதற்காக அதிக அளவில் கொய்யா சாப்பிடுவது ஏற்றதும் இல்லை.
நெல்லிக்காய் ;
ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இந்திய மருத்துவ முறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுவது, அரை நெல்லிக்காய். இதில் அதிக அளவில் வைட்டமின் சி இருப்பதால், நெல்லிக்காயை அரைத்து அதன் சாற்றைக் குடிப்பது கணையத்தைத் தூண்டும். இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து, அதன் விதையை அகற்றிவிட்டு அரைத்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு டீஸ்பூன் அளவு சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஒருநாள் பாகற்காய் சாறு, ஒருநாள் நெல்லிக்காய் சாறு என்று குடிக்கலாம். இதைத் தொடர்ந்து செய்துவந்தால் சர்க்கரையை நாம் கட்டுக்குள் வைக்கலாம்.
பட்டை ;
உணவில் சேர்க்கப்படும் ‘பட்டை’யைப் பொடி செய்துகொள்ள வேண்டும். நான்கு டீஸ்பூன் பட்டைப் பொடிக்கு, நான்கு டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதை, குறைந்த அளவு வெப்பத்தில் அரை மணி நேரம் கொதிக்கவிட வேண்டும். பட்டையில் உள்ள ரசாயனம் நீரில் நன்கு கலந்துவிடும். இந்த நீரை ஆறவைத்து அருந்தினால் சர்க்கரை, கட்டுக்குள் இருக்கும்.
பூண்டு ;
பூண்டில் 400-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உள்ளன. இதன் பலன்கள் அளவற்றது. சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் பூண்டுக்கும் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் மருந்துகளுடன், அவர்களுக்கான பிரத்யேக உணவில் பூண்டையும் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள சில ரசாயனங்கள், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. கல்லீரலானது இன்சுலினின் ஆற்றலை குறைப்பதைத் தவிர்த்து, உடலுக்குப் போதிய அளவு இன்சுலின் கிடைக்கச் செய்கிறது.
சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு :
சர்க்கரை நோயாளிகளுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல் அல்லது சர்க்கரை அளவு குறைதல் என்று இரண்டுவிதமான பிரச்னைகள் ஏற்படலாம்.
ஏன் அப்படி ஏற்படுகிறது எனவும், சர்க்கரை நோயாளிகளின் குடும்பத்தார் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் விளக்குகிறார்.
“ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது மட்டும் பிரச்னை இல்லை. சர்க்கரை அளவு குறைவதுகூட பிரச்னையை ஏற்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, அதைக் கட்டுப்படுத்த மருந்துகள் எடுக்கப்படும்.
டைப் 1 சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் எடுத்துக்கொள்வார்கள். இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்துவிடும். இப்படி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதை ‘ஹைபோகிளைசீமியா’ (Hypoglycemia) என்போம்.
இதுதவிர, மது அருந்துதல், சாப்பிடாமல் இருப்பது போன்றவையும் ரத்தத்தில் சர்க்கரை, அளவைக் குறைக்கும். சர்க்கரை நோயுடன், சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதற்கான வாய்ப்பு அதிகம்.
சர்க்கரை அளவு குறையும்போது சோர்வு, வியர்த்தல், நெஞ்சு படபடப்பு, பசி, மயக்கம், இயல்பாக இருக்க முடியாத நிலை ஏற்படலாம். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் எடுத்துக்கொள்ளும்போது, சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும். அப்படி சரியான நேரத்துக்கு சாப்பிட முடியாத சூழ்நிலையில் இருந்தால், பிஸ்கட், சாக்லேட் போன்றவற்றை சிறிது எடுத்துக்கொள்ளலாம். சரியான நேரத்தில் சாப்பிட முடியாதவர்கள் ஹைபோகிளைசீமியா வராமல் தடுக்க சூழ்நிலையைச் சமாளித்துவிட்டு, விரைவாக வந்து சாப்பிட வேண்டும்.
சர்க்கரை அளவு 70-க்கு கீழ் சென்று, மேலே சொன்ன அறிகுறிகள் தோன்றினால், அவர்கள் உடனடியாக சர்க்கரை, சாக்லேட், பிஸ்கட் என, உடனடியாக சர்க்கரை அளவை உயர்த்தும் உணவுப் பொருள் எதையாவது சாப்பிட வேண்டும். அவரால் சாப்பிட முடியாத அளவுக்கு நிலைமை சென்றால், அருகில் உள்ளவர்கள் சர்க்கரை நீர், ஜூஸ் போன்றவற்றை அளிக்கலாம்.
டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பிரச்னை பெருமளவு வராது. ஆனால், இவர்கள் காய்ச்சல் போன்ற உடல் நலக் குறைவு நேரத்தில் வழக்கமான ‘டோஸ்’ எடுத்துக்கொள்ளலாமா, அல்லது குறைவான ‘டோஸ்’ எடுத்துக்கொள்ளலாமா என்று டாக்டரிம் கேட்டு, அதன்படி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சர்க்கரை நோயாளிகள் சிகிச்சைமுறையை சரியாகப் பின்பற்றவில்லை எனில், அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவானது 300-க்கு மேல் சென்றுவிடும். இதை ‘ஹைபர்கிளைசீமியா'(Hyperglycemia)என்போம். இவர்களுக்கும் ஹைபோகிளைசீமியா போலவே மயக்கம், குழப்பம் போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
ஒருவருக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என்பதை தெரிந்துகொள்ள, ஒவ்வொரு சர்க்கரை நோயாளியின் வீட்டிலும் குளுக்கோஸ் மீட்டர் இருக்க வேண்டியது அவசியம்.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!
Thanks :கடலூர் அரங்கநாதன்...
Category: மருத்துவம்


0 comments