பெரம்பலூரில் அறிவியல் கண்காட்சி கலெக்டர் துவக்கி வைப்பு!
பெரம்பலூர்: பெரம்பலூரில் நடந்த புத்தாக்க அறிவியல் கண்காட்சியை, பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது துவக்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில், இன்ஸ்பயர் விருதுக்காக விண்ணப்பித்த, 94 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா, 5,000 ரூபாய்க்கான செக்குகள் வழங்கப்பட்டது. அவர்கள் தயாரித்த அறிவியல் காட்சிப்பொருட்கள், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. இக்கண்காட்சியை, பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாற்று எரிசக்தி, சொட்டு நீர் மூலம் பாசனம் செய்தல், நடமாடும் தோட்டம் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், அறிவியல் படைப்புகளை வைத்தனர். பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியில் படைப்புகளை பார்வையிட்டு, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், அறிவியல் கோட்பாடுகள், செயல்படும் விதம், பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அறிவியல் புத்தாக்க கண்காட்சியில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் செப்டம்பர் மாதம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடக்க உள்ள மாநில அளவிலான அறிவியல் புத்தாக்க கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சியில் பயிற்சி அலுவலர் அஸ்வின், முதன்மை கல்வி அலுவலர் மகாலிங்கம், மாவட்ட கல்வி அலுவலர் பாலு, தொடக்க கல்வி அலுவலர் எலிசபத் உட்பட பலர் பங்கேற்றனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments