தமிழகத்தில் பால் விலையை மீண்டும் உயர்த்த முடிவு?
சென்னை, ஆக.26:
தமிழகத்தில் ஓரிரு நாட்களில் பால் விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
பால் கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஆவின் நிர்வாகம் மூலம் பொதுமக்களுக்கு பால் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தனியார் பால் விலையை ஒப்பிடும் போது ஆவின் பால் சுமார் 40 சதவீதம் அளவுக்கு விற்பனை குறைவாக உள்ளது. இதனால், பால் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு பால் சப்ளை செய்யும், பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கவேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களு க்கு முன் பால்கூட்டுறவு ஒன்றியங்களுக்கு பால் சப்ளை செய்து வந்த பால் உற்பத்தியாளர்களில் பெரும்பான்மையானவர்கள், தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு சப்ளை செய்ய தொடங்கி விட்டனர். இதனால், ஆவின் நிர்வாகம் பால் பவுடர்களை பாலாக்கி, தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்தது. இந்நிலை நீடித்தால் பிரச்னை ஏற்படும் என்பதை அறிந்த ஆளுங்கட்சி தலைமை, பால் கூட்டுறவு ஒன்றியங்களின் தலைவர்களை முடுக்கி விட்டு, பால் கூட்டுறவு ஒன்றியங்களின் உறுப்பினர்கள் தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு பால் சப்ளை செய்வதை தடுத்து நிறுத்தி பால் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வைத்தது.
பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். காரணம், கால்நடைகளின் தீவனங்களின் விலை உயர்வு, பால் கொள்முதல் விலையை குறைவாக உள்ளது.
எனவே, பால் உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், மக்களை பாதிக்காத வகையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நேற்று நடப்பதாக இருந்தது. திடீர் என்று இந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஓரிரு தினங்களில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க இருப்பதாக ஆவின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Category: மாநில செய்தி


0 comments