பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு வங்கிகள் வழங்கும் கல்விக் கடன் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு கலெக்டர் தகவல்!
பெரம்பலூர், ஆக. 3:
பெரம்பலூர் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு வங்கிகள் வழங்கும் கல்விக் கடன் தொடர்பான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் ஆய்வுசெய்து தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளதாக கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.
பெரம்பலூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் 2ம் கட்டமாக வேப்பூர், ஆலத் தூர் ஒன்றியங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, ஐஓபி, பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் சார்பில் தனி மையங்கள் அமைக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முகாமில் கல்விக் கடனுக்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. விண்ணப்பதாரர்களின் விவரங்கள் கணினிகள் மூலம் பதிவுசெய்யப்பட்டு ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது.கல்விக்கடன் விண்ணப்பங்கள் வங்கியாளர்களால் பரிசீலிக்கப்பட்டு, கல்லூரி கட்டண விவரம் சரிபார்க்கப்பட்டதன் அடிப்படையில் கல்விக்கடன் பெறுவதற்கு ஏற்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டன. ஏற்பு ஆணைகளை வழங்கி கலெக்டர் தரேஸ் அஹமது பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு வங்கிகளின் கல்விக்கடன் வழங்கும் நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாரந்தோறும் ஆய்வுசெய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. இதுவரை நடைபெற்ற 2 கல்விக்கடன் வழங்கும் முகாம்களிலும் பங்குபெறாத மாணவ, மாணவிகளுக்காக இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளைச் சார்ந்த கல்விக்கடன் முகாம் இம்மாதம் 23ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை பெற்றோர்கள் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் பிள்ளைகளை உயர் கல்வி, தொழில்கல்வி கற்க வைத்து முன்னேறிய மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அய்யம்பெருமாள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் (தஞ்சை) ராஜா உள்ளிட்ட ஏராளமான வங்கியாளர்கள், மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் கலந்துகொண் டனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments