சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு : தங்கத்தை பஸ்பமாக்கி வயிற்றில் கடத்தி வந்த 5 பேர் கைது!
சிங்கப்பூர், பாங்காக்கில் இருந்து வயிறு மற்றும் ஆசனவாய் பகுதிகளில் மறைத்து தங்க மாத்திரைகள் கடத்தி வந்த திருச்சி, சென்னையை சேர்ந்த 5 வாலிபர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து மூன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் தங்க நுகர்வு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தங்கத்தின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, பிற பொருட்களில் முதலீடு செய்வதைவிட தங்கத்தில் முதலீடு செய்வதையே பொதுமக்கள் அதிகம் விரும்புகின்றனர். தேவை அதிகரித்து இருப்பதாலும், அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற சில வியாபாரிகளின் ஆசையினாலும் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் கொண்டு வருவதற்கு அதிக வரி வசூலிப்பதால், சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து நூதன முறைகளில் தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது.
அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் மிளகாய் தூள், டீ தூள், காபி தூள், சினிமா சிடி, சாக்லெட், பால்பவுடர், சூட்கேஸ், ஊறுகாய் மற்றும் சிறுவர்கள் பயன்படுத்தும் சைக்கிள் உட்பட பலவற்றில் மறைத்தும், கரைத்தும் தங்கத்தை கடத்தி வருகின்றனர். சுங்கத்துறை அதிகாரிகளும், போலீசாரும் மடக்கி சோதனையிட்டு ஏராளமான தங்கத்தை பறிமுதல் செய்கின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், நள்ளிரவு 11 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்று திரும்பிய திருச்சியை சேர்ந்த ரமேஷ்குமார் (36) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனர். எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து அவரை அங்கிருந்து அனுப்பினர். அவர் நடந்து செல்லும் போது நடையில் சிறிது வித்தியாசம் தெரிந்தது. சந்தேகத்தில் மீண்டும் அவரை அழைத்து தனி அறைக்கு கொண்டு சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். அவரது ஆசனவாயில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த சிறிய பொட்டலம் இருந்ததை கண்டுபிடித்தனர். அதை எடுத்து பார்த்தபோது அதற்குள் 650 கிராம் தங்க பிஸ்கட்கள் சிறுசிறு துகள்களாக நொறுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.19.5 லட்சம். இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து ரமேஷ்குமாரை கைது செய்தனர். இதை தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு, பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு வந்தது. அதில், வந்த சென்னையைச் சேர்ந்த ஜெகதீஷ் (30), ஜெயராமன் (28), கிஷோர் (34), ஹரிஷ்குமார் (30) ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது 4 பேரின் வயிற்றிலும் சிறிய சிறிய உருண்டைகள் ஏராளமாக இருந்தது. அதுபற்றி விசாரித்தபோது, தங்க கட்டிகளை அரைத்து மாத்திரை அளவில் சிறிதாக உருட்டி வாயில் போட்டு விழுங்கியது தெரிந்தது. பின்னர், அவர்களுக்கு இனிமா மற்றும் வாழைப்பழங்களை கொடுத்து இரவு முழுக்க அவைகளை வெளியே எடுத்தனர். மொத்தம் 294 மாத்திரைகள் இருந்தன. அதன் மொத்த எடை 2.9 கிலோ. இதன் சர்வதேச மதிப்பு ரூ.87 லட்சம். இதையடுத்து 4 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். இரு சம்பவத்திலும் மொத்தம் ரூ.1.07 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 5 பேரும் கூலிக்காக இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிந்தது.
Category: மாநில செய்தி
0 comments