சென்னை விமான நிலையத்தில் 4¼ கிலோ தங்கம் சிக்கியது 4 பேர் கைது!
ஆலந்தூர்,
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கிலோ 200 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், 4 பேரை கைது செய்தனர்.சிங்கப்பூர் விமானம்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னை திருவல்லிகேணியைச் சேர்ந்த நைனாமுகமது(வயது 38), செம்பாக்கம் பீர்முகமது(33), சென்னை மண்ணடியைச் சேர்ந்த தமீர்பசித்கான்(21), குரேசி(39) ஆகியோர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பி வந்தனர்.குக்கரில் தங்கம் கடத்தல்
அவர்களின் சூட்கேஸ்களை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை. ஆனால் 4 பேரிடமும் 4 மின்சார குக்கர்கள் இருந்தன. அதன் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை வாங்கி பிரித்துப்பார்த்தனர்.
அப்போது குக்கர்களின் அடிப்பாகத்தில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். 4 மின்சார குக்கரிலும் தலா 700 கிராம் வீதம் 2 கிலோ 800 கிராம் தங்கம் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.84 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக நைனாமுகமது உள்ளிட்ட 4 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இந்த கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.மர்ம பையால் பரபரப்பு
இந்தநிலையில் சென்னை பன்னாட்டு விமான நிலைய வருகை பகுதியில் ‘கன்வேயர் பெல்ட்’ பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் நீண்ட நேரமாக ஒரு கறுப்பு நிற பை, கேட்பாரற்று கிடந்தது. அதை கண்ட விமான நிலைய ஊழியர்கள், மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த மர்ம பை குறித்து மைக்கில் அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் யாரும் பையை உரிமை கொண்டாடி வரவில்லை. இதனால் அந்த பையில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதியும், பரபரப்பும் ஏற்பட்டது.
உடனடியாக விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் விரைந்து வந்து அந்த மர்ம பையை சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதை கண்டுபிடித்தனர். அதன் பின்னர் நிம்மதி அடைந்தனர்.தங்க கட்டிகள்
பின்னர் அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தலா 100 கிராம் எடை கொண்ட 14 தங்க கட்டிகள் இருந்தன. ரூ.42 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் தங்கத்தை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கொண்டு வந்த மர்ம ஆசாமி, விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருப்பதை கண்டதும் ‘கன்வேயர் பெல்ட்’ அருகே தங்கத்தை போட்டுச் சென்று உள்ளார்.தகவல் கொடுத்தது யார்?
அந்த பையில் எந்த விமானத்தில் வந்தார் என்பதற்கான அடையாள சீட்டு இருக்கும். ஆனால் மர்ம ஆசாமி, அதையும் எடுத்துச் சென்றுவிட்டதால் அவர் எந்த விமானத்தில் பயணம் செய்தார் என தெரியவில்லை.
மர்ம ஆசாமிக்கு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருப்பது குறித்து தகவல் கொடுத்தது யார்? ஏற்கனவே தங்கம் கடத்தி வந்த 4 பேர் பிடிபட்ட தகவலை சுங்க இலாகாவில் பணியாற்றும் அதிகாரிகள் கொடுத்து இருக்கவேண்டும் என சந்தேகம் எழுந்து உள்ளது.
இதையடுத்து விமான நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் பார்த்து வருகின்றனர். இதில் முக்கிய நபர் சிக்குவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Category: மாநில செய்தி
0 comments