அபுதாபியில் வேலை அளிப்பதாக மோசடி: விமான நிலையத்தில் 36 பேர் பரிதவிப்பு!

லக்னோ, ஆக.12-
அபுதாபியில் வேலை வாங்கி தருவதாக கூறி உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் பகுதியில் 36 பேரிடம் லட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்து தலைமறைவாகி விட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.
காசியாபாத் நகரில் உள்ள இந்திராபுரம் பகுதியில் வெளிநாடுகளில் வேலை செய்ய ஆட்களை தேர்வு செய்து அனுப்பும் நிறுவனத்தின் மேனேஜர் ஒருவர் வேலை கேட்டு வந்த 36 பேரிடம் தலா 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கமிஷனாக வாங்கிக் கொண்டு அபுதாபிக்கு அனுப்புவதாக உறுதியளித்துள்ளார்.
தேர்வு செய்யப்பட்ட அனைவரும் ஆகஸ்ட் 6-ம் தேதி அபுதாபிக்கு புறப்பட வேண்டும் என்றும் பணி நியமன ஆணை, மற்றும் விமான டிக்கெட்களுடன் காசியாபாத் விமான நிலையம் அருகே காத்திருப்பதாகவும் உறுதியளித்த அவரது பேச்சை நம்பி, வழியனுப்ப வந்த குடும்பத்தார் மற்றும் துணிமணி அடங்கிய பெட்டிகளுடன் 36 பேரும் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர்.
ஆனால், அபுதாபிக்கு அனுப்புவதாக கூறிய மேனஜர் மட்டும் வரவே இல்லை. அவரது செல்போனை அழைத்தபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. வெகு நேரம் விமான நிலைய வாசலில் காத்திருந்து சலித்துப் போன அவர்கள் இந்திராபுரத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவகத்துக்கு சென்றபோது அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.
கடந்த நான்கைந்து நாட்களாக அந்த அலுவலகத்துக்கு நடையாய் நடந்தும், அது திறக்கப்படாததால் பாதிக்கப்பட்டவர்கள் இந்திராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் அந்த மோசடி பேர்வழியை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Category: வளைகுட செய்தி

0 comments