பெரம்பலூரில் வாகன ஓட்டுநர்கள் சாலை மறியல்!
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்க வலியுறுத்தி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் கடந்த 12 ஆண்டுகளாக கார், வேன் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட வாடகை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஓட்டுநர்கள் ஓய்வெடுப்பதற்காக, அப்பகுதியில் கீற்று கொட்டகை அமைத்திருந்தனர்.
இந்நிலையில், அம்மா உணவகம் அமைப்பதற்காக மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையிலான அலுவலர்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டதில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த வாகன ஓட்டுநர்கள் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த மாற்று இடம் ஒதுக்கித் தர வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்ததை தொடர்ந்து, நகராட்சி நிர்வாகமும் ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில், ஓட்டுநர்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கீற்று கொட்டகையை பொக்லின் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. இதையடுத்து ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவில்லையாம்.
இதையடுத்து, தங்களது வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கி தரக் கோரி, ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரஞ்சித்குமார் தலைமையில் புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அ. சுருளியாண்டி தலைமையிலான போலீஸார், உரிய தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
Category: மாவட்ட செய்தி
0 comments