சென்னை விமான நிலையத்தில் தீ விபத்து; பேட்டரிகள் எரிந்து நாசம்!
சென்னை விமான நிலைய மின்சார அறையில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேட்டரிகள் எரிந்து நாசமாயின. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.தீ விபத்து
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய உள்நாட்டு முனையத்தின் தரைத்தளத்தில் வருகை பகுதி உள்ளது. இதன் கீழ் பகுதியில் விமான நிலைய பேட்டரிகள் பாதுகாப்பு அறை உள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட யூ.பி.எஸ். கருவிகள் செயல்படுகின்றன.
அந்த அறையில் இருந்து நேற்று மதியம் 2 மணி அளவில் அலாரம் சத்தம் ஒலித்தது. தொடர்ந்து தீப்பொறியுடன் புகை மூட்டம் கிளம்பியது. விமான நிலைய அதிகாரிகளும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து சென்றனர். உடனடியாக மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது.5 பேட்டரிகள் நாசம்
தீயணைப்பு படையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் 5 பேட்டரிகள் எரிந்து நாசமாயின. உடனடியாக செயல்பட்டு தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து சம்பவம் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பாக விமான நிலைய இயக்குனர் கே.சுரேஷ் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டார்.
அதில், ‘விமான நிலைய கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள யூ.பி.எஸ். பேட்டரிகள் அறையில், அதிக வெப்ப அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தானியங்கி தீயணைப்பு கருவிகள் மற்றும் தீயணைப்பு படையினர் மூலம் உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விமான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்படவில்லை’ என்று கூறப்பட்டு இருந்தது.
Category: மாநில செய்தி
0 comments