பெரம்பலூரில் விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்!
பெரம்பலூர் அருகே உள்ள கண்ணப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். விவசாயி. இவர் 4 ஆண்டுகளுக்கு முன் 4 ஏக்கர் நிலத்தின் பட்டாவை அடகு வைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.6 லட்சம் கடன் உதவியுடன் டிராக்டர் வாங்கி பயன்படுத்தி வந்தார். குறிப்பிட்ட தொகையை செலுத்திய செந்தில், மீதமுள்ள தவணைகளை கட்டத்தவறியதால், வங்கி நிர்வாகத்தினர் கண்ணப்பாடியில் நிறுத்தி இருந்த டிராக்டரை ஜப்தி செய்து எடுத்து வந்து ஏலத்தில் விட்டனர்.
இது குறித்து செந்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும், டிராக்டரை ஜப்தி செய்த வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் பாரதிய கிசான் சங்க விவசாயிகள் பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் வங்கி முன்பு உடம்பில் சட்டை இன்றியும், நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு சாலை அமர்ந்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, பாரதிய கிசான் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். இதில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் செந்தில், பழனியாண்டி, ராமர், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments