.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

இன்ஜினியரிங் கல்லூரிகளின் எதிர்காலம்! கவுன்சலிங் தொடங்கிய 9 நாளில் 10 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்!

Unknown | 3:12 PM | 0 comments

சென்னை:  தமிழகத்தில் 534 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகள் மூலம் கிடைக்கும் 2 லட்சத்து 10 ஆயிரத்து 653 இடங்களுக்கு, கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே மாதம் 3ம் தேதி தொடங்கியது. ஜூன் 11ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. ஜூன் 16ம் தேதி ரேங்க் பட்டியலும் வெளியிடப்பட்டு, விளையாட்டு மற்றும் மாற்றுத்திறனாளிகள் கவுன்சலிங்கும் தொடங்கியது.
28 நாட்கள் கவுன்சலிங்: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில், பல்வேறு தடைகளுக்கு பிறகு, ஜூலை 7ம் தேதி பொதுப்பிரிவு கவுன்சலிங்கும், 9ம் தேதி தொழில்பிரிவு கவுன்சலிங்கும் தொடங்கியது. கலந்தாய்வின் போது ஒரு நாளைக்கு சராசரியாக 4,500 முதல் 5,000 வரை மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். கவுன்சலிங் 28 நாட்கள் அதாவது ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

மாணவர்கள் பங்கேற்பு குறைவு: அண்ணா பல்கலையில் கடந்த 7ம் தேதி தொடங்கி 15ம் தேதிவரை நடைபெற்ற பொறியியல் கவுன்சலிங்கில், சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை 40 ஆயிரத்து 60 மாணவர்கள் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில்,30 ஆயிரத்து 389 மாணவர்களுக்கு கலந்தாய்வில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 534 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள வரவில்லை. 137 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டு, சீட்டு வேண்டாம் என திரும்பி சென்றுள்ளனர். அதேபோல, தொழில்பிரிவு கலந்தாய்வில் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை 2 ஆயிரத்து 808 பேர் அழைக்கப்பட்டதில், 2 ஆயிரத்து 162 பேருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 632 பேர் கலந்தாய்வில் கலந்து கொள்ளவரவில்லை. 14 பேர் வேண்டாம் என திரும்பி சென்றுள்ளனர். கவுன்சலிங் தொடங்கி 9 நாட்களில் 10 ஆயிரம் பேர் கவுன்சலிங்கிற்கு வராமல் இருப்பது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

50 ஆயிரம் இடம் காலி: இந்த கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு, 534 பொறியியல் கல்லூரிகள் மூலம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 653 இடங்கள் கிடைத்துள்ளன. ஆனால் பொறியியல் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கையோ 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 பேர் தான். இதன்படி மாணவர் சேர்க்கைக்கு முன்பே, 36 ஆயிரத்து 966 இடங்கள் இந்தாண்டு காலியாக இருக்கிறது. இந்நிலையில், 9 நாள் கவுன்சலிங்கில் 10 ஆயிரம் பேர் வரவில்லை. இப்போது காலியிட எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டுகிறது. இன்னும் 20 நாள் கவுன்சலிங் மீதமுள்ள நிலையில் இந்தாண்டிற்கான பொறியியல் இடங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணமாக, இன்ஜினியரிங் கல்லூரிகள் தங்கள் இஷ்டத்துக்கு கல்விக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை வசூலிப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரி அதிகரித்த அளவுக்கு அதன் தரமோ அல்லது கட்டமைப்பு வசதிகளோ பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை. எனவே தான் மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்லூரி கிடைக்காத பட்சத்தில் தாங்கள் விரும்பும் கல்லூரியில் எந்த பிரிவு இருக்கிறதோ அதில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்ந்து விடுகின்றனர்.

பிற படிப்புகளுக்கு முக்கியத்துவம்: இது குறித்து கல்வியாளர் ஒருவர் கூறியதாவது:
கவுன்சலிங் தொடங்கி 9 நாட்களில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் கவுன்சலிங்கில் கலந்து கொள்ளவில்லை என்பது இதுதான் முதல்முறை. இதை பார்க்கும் போது பொறியியல் படிப்பு ஏதோ அதலபாதாளத்தில் சரிந்து விழுவதுபோல் தோன்றுகிறது. மாணவர்களின் கவனம், கலை அறிவியல் படிப்புகள், கடல்சார் படிப்புகள், கேட்டரிங் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறை படிப்புகளில் அதிக கவனம் செலுத்துவது இந்த பொறியியல் படிப்பின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதேபோல, இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கையில் ஏற்பட்ட குழப்ப நிலை இதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.
மாணவர்கள் பொறியியலுக்கு மட்டும் விண்ணப்பிப்பதில், பொறியியல் கிடைக்காத பட்சத்தில் மற்ற படிப்புகளில் சேரலாம் என பல துறை படிப்புகளுக்கு விண்ணப்பித்து காத்திருப்பார்கள்.

இந்நிலையில், இந்தாண்டு பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்து விட்டு மாணவர்கள் கவுன்சலிங் தேதிக்காக காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில் கவுன்சலிங் தேதி அறிவிக்கப்படுகிறது. மாணவர்கள் அதற்கு தயாராகும் நேரத்தில், சில காரணங்களுக்காக கவுன்சலிங் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் மறுதேதி அறிவிக்கப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடையும் மாணவர்கள் தங்களுக்கு எங்கு பொறியியல் சீட்டும் கிடைக்காமல் மற்ற துறை படிப்புகளிலும் சீட்டு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் வேறு துறை படிப்புகளில் சென்று சேர்ந்திருக்க வேண்டும். இதுவே, இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் வீழ்ச்சிக்கான முக்கிய காரணமாக இருக்கும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பொறியியல் சீட்டுகள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையிலும், ஆண்டுக்காண்டு பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வதுதான் வேதனையின் உச்சம். இவ்வாறு அவர் கூறினார்.

இசிஇ பிரிவுக்கு அதிக மவுசு
இந்தாண்டு நடைபெறும் பொறியியல் மாணவர் சேர்க்கையில் இசிஇ பிரிவுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற கவுன்சலிங்கில் அதிகபட்சமாக இசிஇ பிரிவை 6,327 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். அடுத்தபடியாக மெக்கானிக்கல் பிரிவை 5,943 மாணவர்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை 4,005 மாணவர்களும், சிவில் பிரிவை 3,644 மாணவர்களும், டிரிபிள் இ பிரிவை 3,524 மாணவர்களும் தேர்வு செய்துள்ளனர்.  

நிரம்பிய இடங்கள்
பொறியியல் மாணவர் சேர்க்கையில் 15ம் தேதிவரை நிரம்பிய இடங்களின் விவரம்: அண்ணா பல்கலை மற்றும் இணைப்பு கல்லூரிகள்-4,568. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள்- 4,986. சுயநிதி பொறியியல் கல்லூரிகள்- 20 ஆயிரத்து 835 இடங்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 389 இடங்கள் நிரம்பியுள்ளன.

புதிதாக 2 பொறியியல் கல்லூரிகள்
2014ம் கல்வியாண்டில்  தமிழகத்தில் புதியதாக இரண்டு பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்து தொடங்கப்பட்டுள்ளன. ஒன்று கோவையில் புதிதாக பிஎஸ்ஜி கல்லூரி மற்றொன்று பழனியில் தொடங்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரிகள் மூலம் அரசுக்கு 390 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது.

காலியாக இருக்கும் இடங்கள்

பொறியியல் மாணவர் சேர்க்கையில் 15ம் தேதிக்கு பிறகு காலியாக இருக்கும் இடங்களின் விவரம்: அண்ணா பல்கலை மற்றும் இணைப்பு கல்லூரிகள்-3,418. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள்- 923. சுயநிதி பொறியியல் கல்லூரிகள்- 1 லட்சத்து 68 ஆயிரத்து 725 இடங்கள் என மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 66 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1