சென்னை மெட்ரோ ரெயிலில் 1276 பேர் பயணம் செய்யலாம்!
சென்னை, ஜூலை.12
சென்னையில் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
மொத்தம் 45.1 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரெயில்பாதை அமைக்கப் பட்டுள்ளளது. இதில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமானம் நிலையம் வரை உள்ள பாதை 23.1 கிலோ மீட்டர் தூரமும், சென்டிரலில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரை உள்ள மற்றொரு பாதை 22 கிலோ மீட்டர் தூரமும் உள்ளது.
தற்போது கோயம்பேடு– பரங்கிமலை இடையே உள்ள உயர்மட்ட ரெயில் பாதையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை ரெயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. வருகிற செப்டம்பர் மாதம் இந்த பாதையில் ரெயில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் ஓடும் ஒரு மெட்ரோ ரெயிலில் 1276 பேர் உட்கார்ந்து பயணம் செய்யலாம். ஆயிரம் பயணிகள் நின்று கொண்டு செல்லலாம். இந்த ரெயில் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது.
ஒரு மெட்ரோ ரெயிலில் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ரெயிலில் உள்ள தானியங்கி கதவுகள் ரெயில் குறிப்பிட்ட பிளாட்பாரத்தில் நின்ற பிறகே திறக்கும். பயணத்தின்போது ஏற்படும் குறைபாடுகளை சேவை மையத்துக்கு தெரிவிக்க ரெயில் பெட்டியில் தொலை பேசி வசதியும் செய்யப்படுகிறது.
அனைத்து பெட்டிகளிலும் ரெயில் வழித்தடம் மற்றும் ரெயில் நிலையங்கள் பற்றிய விவரம் அடங்கிய வரைபடம் வைக்கப்பட்டிருக்கும். பயணிகளின் உடமைகளை வைக்கவும் பெட்டியில் தனி இடம் உண்டு. தீ விபத்து பற்றி எச்சரிக்கும் கருவி, அவசர காலத்தில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கும் பொத்தான் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு சிறப்பு வகுப்பு பெட்டிகள் ஒதுக்கப்படுகிறது. ரெயிலின் செயல்பாட்டை என்ஜின் டிரைவர் தனது அறையில் இருந்தே கண்காணிக்க முடியும்.
சென்னை நகரில் ஒரு மணி நேரத்துக்கு குறைந்தது 21 முதல் 25 மெட்ரோ ரெயில்களை விட திட்ட மிடப்பட்டுள்ளது. 3 நிமிடத்துக்கு ஒரு ரெயிலை இயக்கலாமா என்றும் ஆலோசிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் மெட்ரோ ரெயிலை இயக்குவதால் சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Category: மாநில செய்தி


0 comments