கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 11 பேர் விடுதலை: 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு! நிறுவனருக்கு ஆயுள், தாளாளருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை!!
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: நிறுவனருக்கு ஆயுள், தாளாளருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை!!
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள்.
இந்த தீ விபத்து தொடர்பாக ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப்பள்ளி நிறுவனர் புலவர் பழனிசாமி, அவருடைய மனைவியும் பள்ளி தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, அப்போதைய தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் பி.பழனிசாமி, ஆர்.பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், தாசில்தார் பரமசிவம், பொறியாளர் ஜெயசந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், கும்பகோணம் நகராட்சியின் அப்போதைய ஆணையர் சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் முருகன், தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன் ஆகிய 24 பேரை கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.
கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முதலில் நடைபெற்ற இந்த வழக்கு கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 488 பேரை காவல்துறையினர் சாட்சிகளாக சேர்த்து இருந்தனர். மேலும் 3,126 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, தாசில்தார் பரமசிவம், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணன் ஆகியோரை உயர் நீதிமன்றம் விடுவித்தது. இதேபோல் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் தன்னையும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த தீ விபத்து நடந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் மொத்தம் 230 பேர் சாட்சியம் அளித்தனர். 22 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை கடந்த 17ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமது அலி, தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், நகரமைப்பு அலுவலர் முருகன், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மாதவன், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி ஆகிய 11 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அதேநேரத்தில் பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, பள்ளி தாளாளர் பழனிச்சாமியின் மனைவி சரஸ்வதி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, பொறியாளர் ஜெயசந்திரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகிய 10 பேர் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி, இவர்களுக்கான தண்டனை சிறிது நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கான தண்டனையை பிற்பகலில் நீதிபதி அறிவித்தார். அதன்படி, பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையுடன் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.51 லட்சம் அபராதமும், அவரது மனைவியும் பள்ளியின் தாளாளருமான சரஸ்வதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
பள்ளி தலைமையாசிரியை சந்தானலட்சுமி மற்றும் நான்கு அரசு அலுவலர்கள் உள்பட 7 பேருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், பள்ளியின் கட்டட பொறியாளர் ஜெயசந்திரனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் மற்றும் தலா ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் அபராதமும் விதி்த்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், அபராதத் தொகையில் தலா ரூ.50 ஆயிரத்தை குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், படுகாயம் அடைந்த 15 பேருக்கு தலா 25 ஆயிரமும், சாதாரண காயம் அடைந்த 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Category: மாநில செய்தி
0 comments