வளைகுடா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் நோன்பு நாளை முதல் ஆரம்பம் !
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறை கமிட்டியினரிடமிருந்து நேற்று ரமலான் மாத நோன்பின் பிறைக்கான அறிவிப்பை அடுத்து நாளை [ 29-06-2014 ] ஞாயிற்றுக்கிழமை முதல் நோன்பு ஆரம்பமாகிறது.செய்தி கேள்விப்பட்டதும் மக்கள் மகிழ்ச்சி ததும்ப கூட்டமாக திரண்டு நண்பர்களையும் உறவினர்களையும் மற்றும் சக பணியாளர்களையும் சந்தித்து சலாம் கூறி ரமலான் வாழ்த்தினை மனம் மகிழ உள்ளம் குளிர பகிர்ந்து கொண்டு வருகின்றனர். நேரில் சந்திக்க முடியாதவர்களிடம் அலைபேசியின் ஊடலாக செய்தியினை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
தற்போது துபாயில் நிலவிவரும் கடும் சூட்டையும், வியர்வையையும் பொருட்படுத்தாது நோன்பிற்கான சஹர் உணவை தயாரிக்க தேவையான பொருட்களை வாங்குவதற்காக இங்குள்ளவர்கள் தயாராகி வருகின்றனர்.
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பெரும்பாலானோருக்கு ரமலான் மாதம் முழுவதும் பகுதி நேரத்தில் மாத்திரம் பணி புரியக்கூடிய வாய்ப்புகளை நிறுவனங்கள் வழங்கியுள்ளன. கட்டணம் செலுத்தி பார்க் செய்யக்கூடிய வாகனங்களுக்கு போக்குவரத்துதுறை சார்பாக சில சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமீரக மக்களின் வசதிக்காக போக்குவரத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி, குவைத், ஓமன் ஆகிய நாடுகளோடு ஏனைய இஸ்லாமிய நாடுகளிலும் முதல்நாள் நோன்பு நாளை முதல் பிடிக்கப்படும் என தெரிகிறது.
இப்புனித மிகு ரமலான் மாதத்தில் பாவச்செயல்களை விட்டு விலகி நோன்பு நோற்று,இபாதத்துக்கள் செய்து, ஜகாத் சதக்காக்கள் செய்து, நல் அமல்களால் நிரப்பி இறை பொருத்தத்தையும், இறையன்பையும் நம் அனைவரும் பெற்றிட புஷ்ரா நல அறக்கட்டளை சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்களை அன்புடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
Category: துபாய், வளைகுட செய்தி

0 comments