ஈராக்கிலிருந்து நாடு திரும்பும் மலையாளிகளின் விமான செலவை அரசே ஏற்கும்: உம்மன்சாண்டி!
திருவனந்தபுரம், ஜூன். 27–
ஈராக்கில் தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக உள்நாட்டு போர் மூண்டுள்ளது. அங்குள்ள வெளிநாட்டினர் பலரும் தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்டு பணய கைதிகளாக வைக்கப்பட்டு உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து ஈராக்கிற்கு வேலைக்கு சென்றவர்கள் அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.
ஈராக்கில் உள்ள இந்தியவர்களை மீட்க தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். என்றாலும் கேரளாவைச் சேர்ந்த நர்சுகள் பலரும் இன்னும் மீட்கப்படாமல் உள்ளதாகவும், அவர்கள் உயிர் பயத்தில் இருப்பதாகவும் எனவே அவர்களை உடனே மீட்க வேண்டும் என்றும், இங்குள்ள உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் நேற்று முதல்–மந்திரி உம்மன்சாண்டி தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. இக்கூட்டம் முடிந்த பின்பு முதல்–மந்திரி உம்மன்சாண்டி நிருபர்களிடம் கூறியதாவது:–
ஈராக்கில் சிக்கி தவிக்கும் மலையாளிகளை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம். ஈராக்கில் ஆபத்தான பகுதிகளிலிருந்து தப்பி விமான நிலையத்திற்கு வந்தவர்கள் அங்கிருந்து ஊர் திரும்ப டிக்கெட் கிடைக்காமல் தவிப்பதாகவும், சிலர் விமான செலவுக்கு பணம் இல்லாமல் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். மலையாளிகள் நாடு திரும்புவதற்கான விமான செலவை மாநில அரசே வழங்க தயாராக உள்ளது. இதனை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம்.
ஈராக்கில் விமான செலவுக்கு பணமின்றி மலையாளிகள் யாரும் தவிக்கக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் கேரள அரசு ஈராக்கில் உள்ள இந்திய தூதரகத்துடனும், அங்குள்ள அதிகாரிகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. அங்குள்ள நிலவரத்தை கேட்டு தெரிந்து கொள்வதுடன் மலையாளிகள் யாரும் மீட்கப்பட்டார்களா? என்பது பற்றியும் கேட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Category: மாநில செய்தி


0 comments