பெரம்பலூர் விளையாட்டு விடுதியில் உணவருந்திய 37 மாணவிகளுக்கு வாந்தி–மயக்கம்!
பெரம்பலூரில் விளையாட்டு விடுதியில் உணவருந்திய 37 மாணவிகளுக்கு வாந்தி–மயக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து மாணவிகளும் சிகிச்சை பெற்று விடுதிக்கு திரும்பினர்.விளையாட்டு விடுதி
பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு மாணவிகள் விளையாட்டு விடுதி உள்ளது. இந்த விடுதியில் திருச்சி, புதுக்கோட்டை, கோவை, பெரம்பலூர், அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி உள்ளனர். இவர்கள் தினமும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இந்த விளையாட்டு விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள், தங்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை என்றும், தரமான சுகாதாரமான உணவு வழங்க கோரியும் பலமுறை விளையாட்டு துறை அதிகாரிகளுக்கு முறையிட்டு உள்ளனர்.வாந்தி–மயக்கம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு சப்பாத்தியும், சிக்கன் குருமாவும் வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட அனைத்து மாணவிகளுக்கும் உணவின் தன்மை மாறுபட்டு இருந்ததால் ஒவ்வாமை ஏற்பட்டது. உணவை சாப்பிட்ட 37 மாணவிகளுக்கு வாந்தியும், வயிற்றுவலியும் ஏற்பட்டது. ஒருசிலருக்கு வயிற்றுப்போக்கும், மயக்கமும் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட அனைத்து மாணவிகளும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இரு மாணவிகள் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். பிறகு அனைவரும் விடுதி திரும்பினர்.
இந்த சம்பவம் குறித்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை அலுவலர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments